
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
இதனால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிரமாக இருக்கின்றன. அதுவும், மூன்றாவது போட்டி லார்ட்ஸில் நடைபெறுவதால் கூடுதல் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் இரு போட்டிகளைப் போல் அல்லாமல் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
தொடர்ந்துப் பேசிய ஸ்டோக்ஸ், “இந்த பிட்ச் முதல் ஒரு மணிநேரத்துக்கு பவுலர்களுக்குக் கொஞ்சம் ஒத்துழைக்கும்.
நாங்கள் புத்துணர்ச்சியுடன் தயாராக இருக்கிறோம். லார்ட்ஸில் விளையாடுவதை எல்லோரும் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்துப் பேசிய இந்திய கேப்டன் கில், “இன்று காலை வரை என்ன செய்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது.
முதலில் பந்துவீசுவதுதான் என் தேர்வு. முதல் செஷனில் பவுலர்களுக்கு ஏதாவது இருக்கும்.
பவுலர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஏனெனில், எட்ஜ்பாஸ்டன் (கடந்த போட்டி) பிட்ச்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது அவ்வளவு சுலபமானது அல்ல.
ஒரு மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில் பும்ரா விளையாடுகிறார்” என்றார்.

டாஸ் போடப்படுவதற்கு முன்பு பிட்ச் குறித்துப் பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன், “மைதானத்தில் கொஞ்சம் புல் விடப்பட்டு, அவை சிறிது வெட்டப்பட்டிருக்கிறது.
பந்துவீச்சில் கொஞ்சம் வேகத்தை விரும்புவதால் சிறிதளவு புல் விடப்பட்டிருக்கிறது. ஷார்ட் பால் போடுவதுதான் இந்த பிட்ச்சில் முக்கியமானதாக இருக்கும்” என்று கூறினார்.
இங்கிலாந்து பிளெயிங் லெவன்:
பென் டக்கெட், ஜாக் க்ராவ்லி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், க்ரிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சர், சோயப் பஷீர்.

கடைசியாக 2021 இந்தியாவில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆர்ச்சர் நான்காண்டுகளுக்குப் பிறகு இன்று களமிறங்கியிருப்பதாலும், முதல் போட்டிக்குப் பிறகு பும்ரா மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருப்பதாலும், ஆர்ச்சர் vs பும்ரா மோதலில் யார் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா பிளெயிங் லெவன்:
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், கில், பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா