
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் (24). எம்பிஏ பட்டதாரியான இவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது.
நாய் கடியை அலட்சியமாக எடுத்துக் கொண்டு, எந்தவித சிகிச்சையும் எடுக்காமல் எட்வின் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் எட்வினுக்கு வாயில் எச்சில் துப்பியபடியும், சத்தம் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எட்வின் உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் மாற்றம் அடையாமல் இருந்துள்ளது.
இதனால் உறவினர்கள் அவரை தளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு எட்வின் பிரியனுக்கு ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பின்னர், எட்வின் பிரியனை தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து உடலில் மாற்றம் அதிகம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தெரு நாய் கடித்து உரிய சிகிச்சை எடுக்காததால், பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.