
புதுடெல்லி: ‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ((Special Intensive Revision – SIR) நடவடிக்கைகு ஆதார் அட்டையை ஓர் அடையாள ஆவணமாக ஏற்காதது ஏன்?’ என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், ‘ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.