
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். இவரின் மனைவி மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு நத்திஷ்குமார் என்ற பெயரில் இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், பெயிண்ட்டிங் வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வந்திருக்கிறார் செந்தில் குமார்.
மனைவி மோனிஷாவை மருத்துவ பரிசோதனைக்காக அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேற்று காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அதே காரில் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் ஒன்றில் கொத்துக் கொத்தாக நாவல் பழங்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டிருக்கிறார் செந்தில்குமார். காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, நாவல் மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கத்தொடங்கியிருக்கிறார். திடீரென நிலைத்தடுமாறி மரத்தில் இருந்து கீழே பாறை மீது விழுந்திருக்கிறார் செந்தில்குமார்.
இதைக் கண்டுப் பதறிய மனைவி மோனிஷா அலறித்துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், வரும் வழியிலேயே செந்தில்குமாரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய செந்தில்குமார் நிறைமாத கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே நொடியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.