
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாகத் திறக்கப்பட்டது. இந்தக் கல்லூரி தற்காலிகமாக கூத்தாநல்லூா் ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.
கல்லூரிக்கு இடம் ஒதுக்கி அதில் தனியாக கட்டிடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சரியான இடம் அமையவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மகளிர் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் தன் சொந்த நிலத்தை அரசுக்குத் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்.
லெட்சுமாங்குடி வட்டாரப் பகுதியில் பனங்காட்டங்குடி கிராமத்தில் பூண்டி கலைவாணனுக்குச் சொந்தமாக 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது மூன்றரை ஏக்கர் நிலத்திற்கான பத்திரத்தை கல்லூரி கட்டுவதற்குத் தானமாக அரசுக்கு வழங்கினார் பூண்டி கலைவாணன். அப்போது கல்விக்காக இந்தச் செயலைச் செய்த அவரைப் பலரும் பாராட்டி வாழ்த்தினர்.
பூண்டி கலைவாணனின் செயலை முதல்வர் ஸ்டாலின் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். நிலப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்டாலின் அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.