
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது.
இதில் நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார்.
இந்நிலையில், அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கினர். அப்போது தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும், காலியான இருக்கைகளையும் செய்தி சேகரித்த செய்தியாளர்களை வைகோ வெளியேற்றுமாறு தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அவர்களின் கேமராவில் உள்ள படங்களை அழிக்கவும் கூறினார். கேமராவை தர மறுக்கவே வைகோ மைக்கில் ‘மீடியா பெர்சன் கெட் அவுட்’ என்றார்.
செய்தியாளர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது திடீரென தொண்டர்கள் அவர்களை எட்டி உதைத்து தங்கியுள்ளனர். இதில் ஒருவருக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டது. மேலும் சிலர் தாக்க துவங்கிய போது வைகோ மேடையிலிருந்து அவர்களை தாக்க வேண்டாம் என்று மைக்கில் கூறினார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தாக்கப்பட்டனர்.

“நாளை வைகோ பேசிக் கொண்டிருக்கும் பொழுது தொண்டர்கள் சாப்பிட சென்று விட்டார்கள் என்ற செய்தி நாளிதழ்களில் வரும் இது புதிதல்ல இதற்கு நாங்கள் பயப்படவும் மாட்டோம் எங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதே அவர்களின் வேலையாக இருக்கிறது” என்று வைகோ பேசினார்.
இந்த சம்பவத்தில் 3 தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் தொண்டர்களை கட்டுப்படுத்தினர். இதில் காயமடைந்த செய்தியாளர் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
`மதிமுக வரலாற்றில்..’ – துரை வைகோ வருத்தம்
இந்த சம்பவம் குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் வைகோ என்பது நாடறிந்த உண்மை ஆகும். நேற்று மாலையில் நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் சாத்தூரில் நடந்தது. மூன்றாயிரம் பேர் திரண்டு வந்ததால் மண்டபம் நிறைந்து, வெளியே ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து இருந்தனர். தலைவர் வைகோ அவர்கள் இரவு 8 மணிக்கு பேசத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் மண்டபத்துக்கு உள்ளே இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றனர்.

சற்று நேரத்தில் மின்சாரம் வந்ததும் தலைவர் பேசத் தொடங்கினார். அந்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு செய்ததை பார்த்த தலைவர், “மாலை நான்கு மணி அளவில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐந்து மணி நேரமாக உள்ளே அமர்ந்திருக்கின்றனர். மின்சாரம் தடைப்பட்டதும் சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அங்க போய் படம் எடுப்பீர்களா? “என்று கேட்டார்.
தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால் ஊடகவியலாளர்கள் வெளியே செல்லலாம் என்று தலைவர் அறிவுறுத்திய போது சில தொண்டர்கள் ஆத்திரமடைந்தனர். அதன் பின்னர் நடந்தவை விரும்பத் தகாதது ஆகும்.
மதிமுக 31 ஆண்டுகால வரலாற்றில் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் இவ்வாறு என்றும் நடந்து கொண்டது இல்லை. சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு , தனிப்பட்ட முறையிலும் கழகத்தின் சார்பிலும் பத்திரிக்கை ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.