
கீழடி – இப்போது மீண்டும் பேசுப்பொருள் ஆகியுள்ளது.
2015-ம் ஆண்டு, கீழடியின் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது.
2017-ம் ஆண்டு மூன்றாம் கட்ட ஆய்வுப்பணிகளின் நடந்துகொண்டிருந்தப் போது, அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, பி.எஸ் ஶ்ரீராமன் நியமிக்கப்பட்டார்.
ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்த இடமாற்றம், ‘மத்திய அரசு வரலாற்றை மறைக்கப் பார்க்கிறது’ என்று தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளம்பியது.
அவருக்கு பிறகு, அந்தப் பணியில் அமர்த்தப்பட்ட ஶ்ரீராமன் மூன்றாம் கட்ட ஆய்வு குறித்து, “கீழடி ஆய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.
இதுவும் பெரும் சர்ச்சை ஆனது.
ஶ்ரீராமன் தயார் செய்ய உள்ள அறிக்கை
இந்த நிலையில், தற்போது ‘கீழடி – ஶ்ரீராமன்’ என்ற பேச்சு பரபரப்பாக தொடங்கியுள்ளது.
காரணம் அவர் தற்போது கீழடியின் மூன்றாம் கட்ட ஆய்வு அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க உள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுவதாவது…
“நான் ஓய்வுப்பெற்றதால், கீழடி மற்றும் ஈரோடு அகழ்வாய்வு அறிக்கைகளை இன்னும் சமர்பிக்கவில்லை. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் இதற்கான ஒப்புதலை கேட்டிருந்தேன். அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வுக்கு சம்பந்தப்பட்டவை சென்னையில் இருப்பதால், சீக்கிரம் அறிக்கையைத் தயாரிக்க தொடங்கிவிடுவேன்”.
2019-ம் ஆண்டு, ஶ்ரீராமன் ஓய்வுப்பெற்றார். அதனால், அவர் இதுவரை, கீழடியின் மூன்றாம் கட்ட ஆய்வுப்பணி அறிக்கையை சமர்பிக்கவில்லை.
கடந்த மாதம், அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு மத்திய தொல்லியல் துறை கூறியிருந்தது. ஆனால், அதை மறுத்து, தன்னுடைய அறிக்கை சரியானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறிவிட்டார்.
இந்த நிலையில், ஶ்ரீராமனை தற்போது அறிக்கை தயார் செய்ய கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.