
‘பெருமிதம் பேசும் சேகர் பாபு!’
திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை வெகு விமர்சையாக நடத்தி முடித்திருக்கிறது அறநிலையத்துறை. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், குடமுழுக்குக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ‘முருகரை சிலர் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள்தான் முருகருக்கு மாநாடு நடத்தி பெருமைப்படுத்தினோம். நாங்கள் ஆன்மீகத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.’ என மார்தட்டியிருக்கிறார்.
‘அவமதிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை!’
சேகர் பாபு பெருமிதம் பேசி முடித்த அன்று மாலையே ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு முருகர் கோவிலின் குடமுழுக்கு நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அனுமதிக்கவில்லை. விரக்தியோடு வெளியே வந்த செல்வப்பெருந்தகை, ‘இறைவனைக் கூட பார்க்க முடியவில்லை. 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இது. ஒரே இரவில் தீர்ந்துவிடாது.’ என மனம் வெதும்பி பேசியிருந்தார். ஒரே நாளில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும்தான் திமுக அரசின் மீது நிறைய கேள்விகளை எழுப்ப வைக்கிறது.
‘பா.ஜ.கவின் ராமர் அரசியல்!’
ராமர் கோயிலை மையமாக வைத்து, ராமரை தங்களின் அரசியல் கதாநாயகனாக முன்வைத்துதான் பா.ஜ.க தங்களின் அரசியலை முன்னெடுத்து வைத்தது. பா.ஜ.கவின் ராமர் அரசியலை எதிர்க்க வேண்டி, சில மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ராமருக்கு பதில் வேறொரு கடவுளை கையில் எடுக்க ஆரம்பித்தனர். தங்களின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிற்கும் கட்சிகளை, இந்து விரோத கட்சிகளாக சித்தரித்து பிரசாரங்களை முன்னெடுப்பது பா.ஜ.கவின் வழக்கம்.

‘ராமருக்கு எதிராக வேறொரு கடவுள்!’
பா.ஜ.கவின் அந்த அரசியலை முறியடிக்க வேண்டிதான் மற்றக் கட்சிகளும் தங்களை இந்துக்களின் நண்பனாக காட்டிக் கொள்ள வேண்டி கடவுள்களை கையில் எடுக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 30% சிறுபான்மையினர் வாக்குகள் இருக்கிறது. இந்த வாக்குகளை கவர்வதற்காக மம்தா சிறுபான்மையினருக்கு ஆதரவாக மட்டுமே முடிவுகளை எடுக்கிறார் என பா.ஜ.க பிரசாரம் செய்தது.
‘வங்கத்தில் காளி!’
பா.ஜ.கவின் பிரசாரத்தை முறியடிக்க வேண்டி மம்தா பானர்ஜி காளியையும் துர்கையையும் கையிலெடுத்தார். வங்க மண்ணின் அடையாளமாக காளியை முன்வைத்தார். ஜெய் மா காளி என கோஷம் போட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 28 மணி நேரத்தில் 19 காளி/துர்கை கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தார். பா.ஜ.கவின் ராமர் அரசியலுக்கு பதிலாக காளி அரசியலை முன்வைத்தார். இறுதியில் அது பா.ஜ.கவுக்குதான் நன்மையை கொடுத்தது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் பா.ஜ.க வளர்ந்தது. ஒன்றுமே இல்லாத இடத்திலிருந்து கிட்டத்தட்ட 40% வாக்குகளை பா.ஜ.க தனதாக்கியது. இந்த 40% வாக்குகளை அடுத்தடுத்த தேர்தல்களில் தக்கவைக்கவும் செய்தது. கடைசியாக நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸூக்கும் பா.ஜ.கவுக்கும் கிட்டத்தட்ட 6% தான் வாக்கு வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.கவை எதிர்த்து கடவுளை முன்வைத்து டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஒடிசாவில் நவீன் பட்நாயக்குக்கும் ஏற்பட்டத்தை போன்ற சேதாரம் இன்னும் மம்தாவின் திரிணாமுலுக்கு ஏற்படவில்லை. ஏனெனில், பா.ஜ.க வங்கத்தில் முதலில் செரித்து விழுங்கியிருப்பது கம்யூனிஸ்ட்டுகளின் வாக்கு வங்கியைத்தான். வரும் காலங்களில் அது திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு வங்கியிலும் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கிறது.
‘பா.ஜ.கவுக்கு இரையான கட்சிகள்!’
பா.ஜ.கவின் அரசியல் மதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். இந்தியாவை இந்துத்துவ பாரதமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். சமீபத்தில் அஸ்ஸாம் முதல்வர் கூட இதே கருத்தை பேசியது சர்ச்சையானது.
அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக மதச்சார்பற்ற அரசியலை வலுவாக பேசினால்தான் மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாறாக பா.ஜ.க தங்களின் மீது வீசும் இந்துவிரோத பிரசாரத்துக்கு அஞ்சி கடவுளை கையில் எடுத்தால், கடைசியில் அது பா.ஜ.கவுக்குதான் சாதகமாக முடியும்.

டெல்லியிலும் ஒடிசாவிலும் அதுதான் நடந்தது. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியை ஆரம்பித்த போது தன்னை ஊழலுக்கு எதிரான அடையாளமாக முன்னிறுத்தினார். பெரிய கொள்கைப் பிடிப்பு எதுவும் இல்லாத, எளிதில் நடுத்தர வர்க்கத்தை ஈர்க்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு என்கிற கவர்ச்சியான பிரசாரத்தை மட்டுமே முன்வைத்து அவர் டெல்லியை பிடித்தார். ஒரு கட்டத்தில் கெஜ்ரிவால் மீதும் இந்து விரோதி என்கிற முத்திரையை பா.ஜ.க குத்தியது. சி.ஏ.ஏ வுக்கு எதிராக கெஜ்ரிவால் பேசியது பா.ஜ.கவுக்கு ஒரு பிடியை கொடுத்துவிட்டது.
‘அனுமர் பக்தரான கெஜ்ரிவால்!’
பா.ஜ.கவின் தன் மீது வைத்து இந்து விரோதி என்கிற விமர்சனத்தை முறியடிக்க கெஜ்ரிவால் அனுமரை கையிலெடுக்க ஆரம்பித்தார். அடிக்கடி அனுமர் கோவிலுக்கு சென்று தன்னை அனுமர் பக்தராக காட்டிக் கொண்டார். தன்னுடைய கட்சிக்காரர்களையும் அனுமர் கோவிலுக்கு செல்ல வைத்தார். தொலைக்காட்சியில் உட்காந்துக் கொண்டு அனுமர் மந்திரத்தை ஓதினார். ராம நவமிக்கு ராமாயணத்தை நாடகமாக அரங்கேற்றினார்.

திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த மறுநாளே அனுமர் கோயிலுக்கு சென்றுவிட்டுதான் அடுத்தக்கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ஆனால், எந்த பலனும் இல்லை. கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 27 ஆண்டுகள் கழித்து பா.ஜ.க டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. அதேமாதிரிதான் ஒடிசாவில் புரி ஜெகநாதரை பிஜூ ஜனதா தளம் கையில் எடுத்தது. அவர்களை விட பல மடங்கு வலுவான குரலில் ஜெய் ஜெகநாதர் கோஷத்தை எழுப்பி பா.ஜ.க அங்கே ஆட்சியைப் பிடித்தது.
‘தமிழ்நாட்டுக்கு முருகர்!’
இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டுதான், முருகர் மாநாட்டை நடத்தி முருகருக்கு பெருமை சேர்த்துவிட்டோம் என சேகர் பாபு பேசியதையும் அணுக வேண்டும். தமிழகத்தில் தங்களுக்கான அரசியல் ஆயுதமாக பா.ஜ.க முருகரை கையில் எடுக்கிறது. வேல் யாத்திரை, திருப்பரங்குன்றம் பிரச்சனை, இந்து முன்னணியின் முருகர் மாநாடு என தமிழ்நாட்டில் புது ரூட்டை பிடித்திருக்கிறது பா.ஜ.க.
திமுகவை இந்து விரோத கட்சியாக முன்னிறுத்துவதுதான் அவர்களின் அஜெண்டா. அந்த அஜெண்டாவுக்கு எதிராக திமுக தங்களுக்குப் பின்னால் வலுவாக இருக்கும் சமூகநீதி, பகுத்தறிவு அரசியலை வலுவாக முன்வைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால், சேகர் பாபுவின் திமுகவும் முருகரை கையில் தூக்கிக் கொண்டு நிற்கிறது. நாங்கள்தான் முருகருக்கு இதையெல்லாம் செய்தோம் என சேகர் பாபு பெரிய பட்டியலையே வாசிக்கிறார். நாங்கள் நடத்தியதுதான் உண்மையான பக்தர்கள் மாநாடு என பா.ஜ.கவோடு அட்டக்கத்தி வீசிக்கொண்டிருக்கிறார்.
பா.ஜ.கவுக்கு எதிராக அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் திமுக கையிலெடுத்திருக்கும் முருகர் அரசியலைப் பற்றி வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் புளியந்தோப்பு மோகனிடம் பேசினோம், ‘அறநிலையத்துறையுடைய வேலை கோவில்களை நிர்வகிப்பது மட்டும்தான். கடவுள்களை ப்ரமோட் செய்வது அவர்களின் வேலை இல்லை. ஒரு மாநாடு நடக்கிறதென்றால், அதற்கென்ன தேவை இருக்கிறது, அதற்கென்ன நோக்கம் இருக்கிறது என்பது ரொம்பவே முக்கியம்.

‘திராவிட பெரியாரிய அமைப்புகளை மறந்த திமுக!’
முருகர் மாநாட்டின் நோக்கம்தான் என்ன? மக்கள் முருகரை கைவிட்டுவிட்டார்கள், முருக வழிபாடு குறைந்துவிட்டது என்று அதை ஊக்குவிக்க மாநாடு நடத்தினீர்களா? அது அறநிலையத்துறையின் வேலையே இல்லையே. இங்கே பா.ஜ.கவும் அவர்கள் சார்ந்த இந்துத்துவ அமைப்புகளும்தான் கதையாடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு எதிராக அரசியல் செய்கிறேன் என்ற பெயரில், அவர்களின் கதையாடலுக்கு திமுக இரையாகிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, சேகர் பாபு இதைத் தொடர்ந்து வலிந்து செய்துகொண்டிருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய விநாயகர் ஊர்வலத்தில் கொடியசைத்து வைத்தார். அதன்பிறகு முருகர் மாநாடு. அங்கேயே அடுத்ததாக அம்மன்களின் மாநாட்டை நடத்துவோம் என்கிறார். இதோ இப்போது குடமுழுக்கு நடத்துகிறார். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதை முடித்துவிட்டு நாங்கள்தான் முருகருக்கு பெருமை சேர்க்கிறோம் என பா.ஜ.கவின் வழியிலேயே பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுக்க நினைக்கிறார். இதெல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடப்பதில்லை.

வடமாநிலங்களில் ராமர், காளி, துர்கை, ஜெகநாதர் என மாநிலங்களுக்கு ஏற்ப பா.ஜ.க கடவுள்களை கையிலெடுத்து அரசியல் செய்கிறது. இங்கே அந்தவகையில் முருகரை கையில் எடுத்திருக்கிறார்கள். இதற்கு எதிராக திமுக தனது அடிப்படைக் கொள்கைகளை ஆயுதமாக ஏந்தி போராட வேண்டும். பெரியார் வகுத்து வைத்த பாதை அவர்களுக்கு பின்னால் இருக்கிறது.

பா.ஜ.க முன்வைக்கும் கடவுள் அரசியலுக்கு எதிராக, திமுக பகுத்தறிவு அரசியலையும் சமூகநீதி அரசியலையும் வலுவாக முன்வைத்திருக்க வேண்டும். பா.ஜ.கவை பின்னணியில் வைத்துக் கொண்டு இந்து முன்னணி முருகர் மாநாட்டை நடத்துகிறது. ஆனால், திராவிட அமைப்புகளையும் பெரியாரிய அமைப்புகளையும் வைத்து பகுத்தறிவு சம்பந்தமாக திமுக அப்படி என்ன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது? திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுக்கு கூட நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.
‘பின்னோக்கி இழுக்கும் திமுக!’
தங்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் மட்டும் தங்களை தற்காத்துக் கொள்ள பெரியாரிய அமைப்புகளை திமுக பயன்படுத்திக் கொள்கிறது. மற்றபடி அவர்களை திமுக ஒரு சுமையாகத்தான் பார்க்கிறதோ என்ற கேள்விதான் எழுகிறது. நீ முருகருக்கு பெருமை சேர்க்கவில்லை. நாங்கள்தான் முருகருக்கு பெருமை சேர்க்கிறோம். நாங்கள்தான் முருகரை பாதுகாக்கிறோம் என திமுக சொல்வதன் மூலம் அவர்களே தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள்.

தமிழ்நாடுடைய கதையாடல் எப்போதுமே வேறாகத்தான் இருக்கிறது. நேரு, இந்திரா காந்தி உட்பட பலருமே தமிழ்நாடை ஒரு தனித்தீவு என்றுதான் சொல்லியிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு கருத்தியல்ரீதியாக ஒரு ஒருமித்த பிடிப்பு இருக்கிறது. பா.ஜ.க இங்கே காலூன்றினால் அந்த கருத்தியல் பிடிப்புக்கும் தமிழ்நாட்டின் வரலாறுக்கும் பிரச்சனை வரும் என்பதால்தான் ஒருமித்த குரலில் திமுகவுக்கு வாக்களித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சமூகநீதி தேரை முன்னோக்கி நகர்த்திச் செல்லவில்லையென்றாலும், பின்னோக்கி இழுக்கக்கூடாது. ஆனால், அதைத்தான் திமுக செய்துகொண்டிருக்கிறது.
இந்துத்துவத்தை ஏற்கமாட்டோம் என்பது திமுகவின் கொள்கைகளில் மட்டும்தான் இருக்கிறது. அவர்களின் செயல்பாட்டில் இல்லை. மேல்பாதி, திரௌபதி அம்மன் கோவில்களிலெல்லாம் என்ன நடந்தது? அங்கே இருக்கும் சமூகப் பிரச்சனைகளை திமுக தீர்த்திருக்க வேண்டுமே. பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தின் மீது அம்பேத்கர் வைத்த விமர்சனத்தைதான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பார்ப்பனர்களை கேள்வி கேட்பது முக்கியம்தான். அதேநேரத்தில் பார்ப்பனரல்லாதோர் இயக்கங்கள் தங்களின் இருப்பையும் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனரல்லாதோரும் தீண்டத்தகாதவராகவும்தான் பார்க்கின்றனர். அதனால்தான் செல்வப்பெருந்தகைக்கு நடந்த சம்பவம் அமைதியாக கடந்து செல்லப்படுகிறது. இதே எதாவது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நடந்திருந்தால் எதிர்வினை வேறுமாதிரியாக இருந்திருக்கும். திமுகவே சங்கரமடத்தை எதிர்க்கும். ஆனால், ஆதினங்களை எதிர்க்கமாட்டார்கள். பார்ப்பனரல்லாதோர் வகுப்புணர்வை காட்டும் வகையில்தான் முருகர் மாநாட்டையே நடத்துகின்றனர். அந்த மாநாட்டிலும் திமுக அர்ஜூன் சம்பத் போன்ற இந்துத்துவவாதிகளுக்குதானே முக்கியத்துவம் கொடுத்தது?

‘பா.ஜ.கவுக்குதான் வலுசேர்க்கும்!’
செல்வப்பெருந்தகையே இதை 2000 ஆண்டுகால பிரச்சனை என கடந்துதான் செல்கிறார். திமுக இந்த இடங்களில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அதைவிட்டு விட்டு அவர்களும் முருகரை கையிலெடுப்பது பா.ஜ.கவுக்குதான் வலுசேர்க்கும். முருகர் தமிழ்க்கடவுளா இல்லையா என்பதெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் நடக்க வேண்டிய விவாதங்கள். பா.ஜ.க முன்னெடுக்கும் கதையாடல்களுக்கு திமுக இரையாகக்கூடாது. திமுக தமிழகத்தின் நலன்சார்ந்த கதையாடலை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தமிழ்நாட்டை இந்துவயப்படுத்தும் வேலைகளில்தான் திமுகவும் இறங்கியிருக்கிறது. நீண்டகால அடிப்படையில் திமுகவுக்கு இது பலனளிக்கப்போவதில்லை.’ என்றார்.
‘மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்…’
மதுரையில் இந்து முன்னணி முருகர் மாநாட்டை நடத்திய போது, அதற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்திருந்த மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்களிடம் பேசினோம், ‘மதத்தை அரசியலில் கலப்பது தவறானது என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் நீதிமன்றமே கூறியிருக்கிறது. ராஜாஜி, பக்தவச்சலம், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என யார் காலத்திலுமே முருகருக்கு இப்படியெல்லாம் மாநாடு நடத்தி ப்ரமோட் செய்ததே இல்லையே. ராஜாஜி கம்ப ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.
‘அவர்கள் கூட…’
ஜெயலலிதா தீவிர ஆன்மீகவாதி. அவர்கள் ஆட்சி செய்தபோது கூட இப்படியெல்லாம் நடக்கவில்லை. மதமாற்ற தடைச்சட்டம், கோயில்களில் ஆடு, கோழி வெட்டக்கூடாது என சட்டங்களை இயற்றினாலும் அதிலிருந்தெல்லாம் ஜெயலலிதா பின்வாங்கினார். தைப்பூசத்தை நடத்துங்கள். சூரசம்ஹாரத்தை நடத்துங்கள். குடமுழுக்கை நடத்துங்கள். அதெல்லாம் எப்போதும் நடக்கக்கூடியது. ஆனால், அதில் அரசியலை புகுத்தி மாநாட்டை நடத்துவதும், நாங்கள்தான் முருகருக்கு பெருமை சேர்க்கிறோம் என்பது தவறு. அது பா.ஜ.கவினுடைய அரசியல்.
‘மதம் – தனிப்பட்ட உரிமை!’
பல மாநிலங்களில் பா.ஜ.க இந்த அரசியலை முன்னெடுத்துள்ளது. பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் மாநிலக் கட்சிகளும் இதே கதையாடலை பேசி அவர்களிடம் வீழ்ந்துதான் போயிருக்கின்றன. திமுக பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்து, அவர்களின் கடவுள் அரசியலை ‘Expose’ செய்ய வேண்டும். மாறாக, பா.ஜ.கவின் அரசியலைத்தான் நாங்களும் பேசுவோம் என்றால் அதில் எந்தப் பலனும் இல்லை. மதமும், வழிபாடும் ஒரு தனிப்பட்ட உரிமை. அது ஒரு ‘Private Affair’.

எந்த அரசியலும் இல்லாமல் மதுரையில் சித்திரைத் திருவிழாவில் 10 லட்சம் மக்கள் கூடுகிறார்கள். அதில் அரசியலை புகுத்த நினைத்தால் எதிர் விளைவுகள்தான் ஏற்படும். சேகர்பாபுதான் இதை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறார். கருணாநிதி காலத்தில் பயிற்சி பெற்ற தமிழ் அர்ச்சகர்களே நீதிமன்றத்தில் முருகர் மாநாட்டுக்கு எதிராகத்தான் வாதிட்டிருந்தனர். இவர் முருகர் மாநாட்டை நடத்துகிறார். அறநிலையத்துறையின் கல்லூரிகளில் முந்தைய ஆட்சிகளெல்லாம் தகுதியானவர்கள்தான் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
‘சேகர் பாபுதான் பிரச்னை!’
சேகர் பாபு வந்த பிறகுதான் இந்துக்கள்தான் அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என விளம்பரமே வெளியிட்டார். இதெல்லாம் சங்பரிவாரங்களின் அரசியல். திமுக அதைப் பேச வேண்டிய தேவையே இல்லை. அறநிலையத்துறையை நன்றாக நிர்வகிப்பதும், கோவில் நிகழ்வுகளை சிறப்பாக நடத்துவதும்தான் சேகர் பாபுவின் வேலை. மாறாக, முருகருக்கு நாங்கள்தான் பெருமை சேர்க்கிறோம் என தவறான அரசியலை முன்னெடுத்தால் அவர் மீதான முடிவை கட்சிதான் எடுக்க வேண்டும். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் சொல்வதானால் சேகர்பாபுவை திமுகவில் இருக்கும் சங்கி என்று கூட விமர்சிப்பேன். மதத்தை யார் அரசியலொல் கலந்தாலும் அது நல்ல ஜனநாயகத்துக்கு வித்திடாது. இதே நிலை தொடர்ந்தால் நீண்டகால அடிப்படையில் வலதுசாரிகள்தான் இதன்மூலம் பயன்பெறுவார்கள்.’ என்றார்.
கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை என திராவிடர் கழகம் முன்வைத்த கொள்கைகள் எவ்வளவோ இருக்கிறது. அண்ணா கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கமாட்டேன். பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் எனக் கூறினார். ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார் என கருணாநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வேற்றுமைகளை களைந்து அத்தனை பேருக்குமான பரிபூரண உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டியதுதான் திராவிடம் பேசும் இயக்கங்களின் லட்சியமாக இருக்க வேண்டும். மாறாக, பா.ஜ.க வுக்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் திமுகவும் முருகரை கையில் தூக்கினால் அது ஒருபோதும் திராவிட மாடலாக இருக்காது. நீண்டகால அடிப்படையில் வலதுசாரி இயக்கங்களுக்கே அது லாபத்தைக் கொடுக்கும். அது தான் பிற மாநிலங்களிலும் நடந்தது.!