
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதன் அடிப்படையில், பட்டாசு ஆலை விபத்துகளே இனி நிகழக் கூடாது என்னும் நோக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், “பட்டாசு ஆலை துவங்குவதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறையிடம் உரிமம் பெற வேண்டும். ஆனால், பட்டாசு ஆலைக்கு உரிமம் வழங்குவதற்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறதா? தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கு மத்திய அரசிடம் உரிய விளக்கம் இல்லை. அதனால், விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீர்ப்பாயம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” எனக்கூறியிருந்தது.
விதிகளை பின்பற்றவில்லை என்றால் அனுமதி வழங்கக்கூடாது
இதையடுத்து இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த தீர்ப்பாயம், ஆலைகளில் தொடர் மேற்பார்வைகள் இல்லாததால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பட்டாசுகளை சேமித்து வைக்கின்றனர். இதனால், தொடர்ந்து பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பட்டாசு ஆலைகளை சுற்றி வீடுகள் இருப்பதால் பாதிப்புகள் ஏற்படுகிறது. விதிகளை பின்பற்றாத எந்த ஆலைக்கும் இனி அனுமதி வழங்க கூடாது.

ஆய்வுகளை மேற்கொள்ள இரு குழுக்கள் அமைப்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன், பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்களா? விதிமீறல்கள் ஏதும் உள்ளதா? என்கிற ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டனர்.
இந்த குழுக்கள் நேரடியாக ஆலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், தீவிரத்தையும் கருத்தில் கொண்டு 10 நாள்களுக்குள் இந்த ஆய்வுகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.