
கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று இரவு கரூர் வந்தார். இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கரூர் மாநகராட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தில் ரூ. 58.25 கோடி மதிப்பீட்டில், 13 முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய, கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில் பாலாஜி, “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நம்முடைய மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு புதிய தடுப்பணை, குளித்தலையில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தரகம்பட்டியில் ஒரு வட்டாட்சியர் அலுவலகம், நம்முடைய கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே மேம்பாலர்கள், அதேபோல உயர்மட்ட பாலங்கள், குடிநீர் திட்டங்கள் அரவக்குறிச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் என நிறைவேற்றி தந்தார்.
அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் நம்முடைய கரூர் மாவட்டத்திற்கு இந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ மூன்றாயிரம் கோடிக்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் தந்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கக் கூடிய புதிய பேருந்து நிலையத்தை தங்களுடைய பொற்கரங்களால் திறந்து வைத்து இன்னும் ஒரு வாரம் அல்லது 10 தினங்களுக்குள்ளாக படிப்படியாக நகரத்தில் இருக்கக்கூடிய பேருந்து நிலையத்தின் பேருந்துகளை இங்கு மாற்றி முழுவதுமாக 15 தினங்களுக்குள் முழு பேருந்துகளையும் இங்கிருந்து அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல, அறிவியல் பூங்கா ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று திறக்கப்பட்டிருக்கிறது. காமராஜ் மார்க்கெட் வணிக வளாகம் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. குறிப்பாக, 13,000 பயனாளிகளுக்கு அரசனுடைய பட்டாக்களை இந்த அரங்கத்திலே வழங்கி பல ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்காதா என்ற ஏங்கிய நிலையை மாற்றி முதலமைச்சருடைய வழிகாட்டுதலோடு 13,000 பயனாளிகளுக்கு அரசுடைய பட்டாக்களை வழங்கியிருக்கிறோம்.
வரக்கூடிய 2026 -ல் உங்களது கரத்துக்கு வலுசேர்க்கிற மாவட்டமாக இந்த கரூர் மாவட்டம் இருக்கும். இந்த வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களோடு இன்னும் பல்வேறு சிறப்பு திட்டங்களை நம்முடைய துணை முதலமைச்சர் தயாராக இருக்கின்றார். அத்தனை திட்டங்களையும் பெறுகின்ற நம்முடைய கரூர் மாவட்டத்தினுடைய இலக்கு என்பது வரக்கூடிய 2030 -ம் ஆண்டுக்குள் ரூ. 50,000 கோடி உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்து தொழில் முனைவோர்கள் முன்னெடுத்திருக்கின்ற அந்த வெற்றிப் பயணத்தில் அரசு முழு ஒத்துழைப்பை கொடுத்து அவருடைய தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடத்தை கொடுத்து இருக்கக்கூடிய அட்லஸ் நாத்திமுத்துக்கு நன்றியை தெரிவித்த கொள்கிறோம்” என்றார்.