
மும்பை அருகில் உள்ள தானே ஷாப்பூரில் ஆர்.எஸ்.தமானி என்ற பள்ளி செயல்படுகிறது. இங்குள்ள பாத்ரூம்பில் ரத்தக்கரை இருப்பதை துப்புரவு தொழிலாளி பார்த்து அதனை பள்ளி முதல்வரிடம் தெரிவித்தார்.
இதனால் 5-வது முதல் 10-வது வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பாத்ரூம் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர். யாருக்கு மாதவிடாய் வந்திருக்கிறது என்று கேட்டனர். அதோடு இதில் திருப்தியடையாத ஆசிரியர்கள் மாணவிகளிடம் உள்ளாடையை கழற்றி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெற்றோர் கூறுகையில், ”மாதவிடாய் குறித்து மாணவிகளுக்கு சரியான கல்வி கற்றுக்கொடுப்பதற்கு பதில் பள்ளி முதல்வர் மாணவிகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறார். இது வெட்கக்கேடான, ஜீரணிக்க முடியாத ஒரு செயல் ஆகும். இச்சம்பவத்திற்காக பள்ளி முதல்வர் மீது வழக்கு பதிவு அவரை கைது செய்யவேண்டும்” என்றார்.
பெற்றோரின் போராட்டத்தை தொடர்ந்து போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். பள்ளி முதல்வர் மீது பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் இது தொடர்பாக பள்ளி முதல்வர், பள்ளி அறங்காவலர்கள் 2 பேர், 4 ஆசிரியர்கள், ஒரு பியூன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் பள்ளி முதல்வர் மாணவிகளை ஹாலுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி இருக்கிறார். அதோடு பெண் பியூனை கொண்டு 12 மாணவிகளிடம் ஆடைகளை கழற்றி மாதவிடாய் குறித்து சோதனை செய்ததாக தெரிய வந்துள்ளது.

இதில் ஒரு மாணவி தனக்கு மாதவிடாய் இல்லை என்று சொல்லி இருக்கிறார். ஆனால் சோதனையில் அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் சக மாணவிகள் முன்னிலையில் அம்மாணவியை முதல்வர் திட்டி இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் புகார் செய்தனர். பள்ளி முதல்வரின் இச்செயல் பெற்றோரை கொந்தளிப்பு அடைய செய்துள்ளது.