• July 10, 2025
  • NewsEditor
  • 0

தலைநகரில், கடலோர வெள்ளை மாளிகையில் பணிபுரியும் டி.ஐ.ஜி அந்தஸ்திலுள்ள ஒரு காக்கி அதிகாரி, ‘பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்’ என அவருடைய மனைவியே கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்டு புகார் கொடுத்து, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார். சம்பந்தப்பட்ட டி.ஐ.ஜி-யும் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் பாலியல் தொடர்பான சில சர்ச்சைகளில் சிக்கியவர்தானாம். அதனால்தான், சட்டம்-ஒழுங்கு இல்லாத பணி அவருக்கு வழங்கப்பட்டதாம். இந்தச் சூழலில், மனைவியே அவர்மீது புகாரளித்திருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. விவகாரம் டி.ஜி.பி அலுவலக உயரதிகாரியின் காதுக்கும் செல்ல, சம்பந்தப்பட்ட டி.ஜ.ஜி-யை நேரில் அழைத்து விசாரித்திருக்கிறாராம். ‘இந்த விவகாரம் விரைவிலேயே பொதுவெளியில் வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள் கடலோர வெள்ளை மாளிகை வட்டாரத்தில்!

மடப்புரம் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தை மிரட்டலாக கன்வின்ஸ் செய்தவர் என்று பலராலும் கைகாட்டப்படும் துணைப் புள்ளிமீது, பல்வேறு அதிர்ச்சி விவகாரங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. திருப்புவனம், மானாமதுரை, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளின் அதிகாரத்தை இவரது பொறுப்பில் விட்டிருக்கிறார் மாவட்ட மாண்புமிகு. அந்த தைரியத்தில், மணல் கடத்தல், ஆக்கிரமைப்பு, கட்டப்பஞ்சாயத்து எனச் சட்டத்துக்கு புறம்பான அனைத்து விவகாரங்களையும் முன்னின்று செய்திருக்கிறாராம் துணைப் புள்ளி. தற்போது கைதாகியிருக்கும் தனிப்படையினரை, பல விஷயங்களுக்கும் பயன்படுத்தி அட்ராசிட்டி செய்திருக்கிறாராம் இவர். ‘இந்த விவகாரங்கள் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக தலைமைக் கழகத்துக்குப் புகாராக வரவே, மாவட்ட மாண்புமிகுவின் தலைக்கே இப்போது பிரச்னையாகிவிட்டது’ என்கிறார்கள் சீமை மாவட்ட உடன்பிறப்புகள்!

ஆந்திராவை ஒட்டிய மாவட்டத்தில், சூரியக் கட்சியின் பாக நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், ‘மரியாதைக்குரிய’ தொகுதியின் மக்கள் பிரதிநிதி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், 296 முகவர்களில் கிட்டத்தட்ட நூறு பேர் ஆப்சென்ட். மக்கள் பிரதிநிதியின் செயல்பாடு மீதான அதிருப்தியால்தான், முகவர்கள் பலரும் அப்சென்ட் ஆகிவிட்டார்களாம். ‘கூட்டம் குறைவாக இருப்பது தெரிந்தால், தன்னுடைய வண்டவாளம் தண்டாவளம் ஏறிவிடும்’ என்று பயந்துபோன பிரதிநிதி, பூத் கமிட்டிக்குச் சம்பந்தம் இல்லாத ஆட்களை அழைத்துவந்து கூட்டத்தில் அமரவைத்தாராம். ஆனாலும், விஷயத்தை அறிந்துகொண்ட பொறுப்பாளர், ‘இன்னைக்கு நடந்தது கொஞ்சமும் சரியில்லை. இனி இப்படி எப்பவுமே நடக்காம பாத்துக்கோங்க…’ என்று மக்கள் பிரதிநிதியைக் கடிந்திருக்கிறார். இந்த விவகாரம் தலைமையின் கவனத்துக்கும் சென்றிருப்பதால், ‘அடுத்த முறை சீட் கிடைக்காதோ..?’ என்று பீதியில் உறையத் தொடங்கியிருக்கிறாராம், அந்த மக்கள் பிரதிநிதி!

கடைக்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த மாண்புமிகுவின் வீடு அமைந்திருக்கும் பகுதி, ‘மில்க்’ ஊராட்சிக்குள் வருகிறது. அந்த ஊராட்சியில் 15 ஆண்டுகளாகத் தலைவராக இருந்தவர், திடீரென சூரியக் கட்சியிலிருந்து விலகி, கதர்க் கட்சிக்குத் தாவிவிட்டார். கடைக்கோடி மாவட்டத்தில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் இந்த விவகாரத்தை, மாண்புமிகுவுக்கு எதிராகத் திருப்பிவிட நினைக்கும் எதிர்க்கோஷ்டியினர், “சொந்த ஊரைச் சேர்ந்த நிர்வாகியையே மாண்புமிகுவால் தக்கவைக்க முடியவில்லை. இவரை நம்பி 2026 தேர்தலுக்கு மாவட்ட அரசியலைக் கொடுத்தால் என்ன ஆவது?” என பற்றவைத்துவிட்டார்களாம். அதோடு, அவரது சில உள்ளடி வேலைகளையும் மேலிடத்துக்குப் புகாராகப் பறக்கவிட்டிருக்கிறார்களாம் சூரியக் கட்சியின் சீனியர்கள்!

நெற்களஞ்சிய மாவட்டத்திலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளையும் கவனிக்கும் வகையில், நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்திருக்கிறது இலைக் கட்சி. அந்த நான்கு பேரோடு, மாநகரப் புள்ளியும், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும் என மொத்தம் ஆறு பேர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். இந்த நிலையில், கூட்டணியிலுள்ள மலர்க் கட்சி, குக்கர் கட்சி, மாம்பழக் கட்சி என அவர்களே ஐந்து தொகுதிகளைக் குறிவைத்து வேலை செய்துவருகிறார்களாம். இது, இலைக் கட்சிப் புள்ளிகளைப் பெரிதும் அப்செட்டில் ஆழ்த்தியிருக்கிறதாம். இது தொடர்பாகத் தலைமையிடம் புகார் கொடுத்தும் எந்தப் பயனுமில்லையாம். இதனால், விரக்தியில் தலைமையின் பயண வேலைகளில் ஆர்வமில்லாமல் இருந்திருக்கிறார்கள். இதையறிந்த தலைமை, ‘பயணம் முடிந்ததும் பஞ்சாயத்தை வெச்சுக்கலாம்… இப்போ வேலையைப் பாருங்க…’ என்று கண்டித்திருக்கிறது. ஆனாலும், சுற்றுப்பயண ஏற்பாட்டில் சுணக்கம் தொடரவே, மாஜியை வைத்து வேலையைச் செய்கிறதாம் தலைமை!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *