
காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், சங்கரன்கோவிலில் முருகன், பாளையங்கோட்டை சிறையில் முத்துமனோ உள்ளிட்ட அனைத்து காவல் நிலைய மரணங்களுக்கும் நீதி கேட்டும், விசாரணையின் போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்தில், மடப்புரம் அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழக அரசு, காவல் துறையைக் கண்டித்து பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பின்பு டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரின் சித்திரவதையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறிய அளவில் திருடும் திருடர்கள், ஏதும் அறியாத அஜித்குமார் போன்றவர்களை காவலர்கள் அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

அஜித்குமாரின் தம்பி நவீனுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும். அப்போதுதான் தகுதிக்கேற்ப பணி உயர்வு பெறுவார். அதை விட்டுவிட்டு அரசின் சார்பு நிறுவனமான ஆவினில் பணி வழங்கியது ஏற்புடையது அல்ல, இந்த சம்பவத்தில் நீதிமன்றம் உரிய நீதி வழங்கிட வேண்டும்” என்றார்.