
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 20 மாணவ – மாணவிகள் படித்து வரும் நிலையில், ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (45) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் இருந்த ஆசிரியர் ஆரோக்கிராஜ் மித மிஞ்சிய மது போதையில் பள்ளியில் தகராறில் ஈடுபட்டத்துடன், பள்ளியிலேயே படுத்துக் கிடப்பது மற்றும் அவருக்கு மக்கள் தண்ணீர் கொடுக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை வேதனைக்கு ஆளாக்கியது. பின்னர், இதுபற்றி தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் லதா, மணப்பாறை டி.எஸ்.பி கதிரவன், மணப்பாறை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் அதிகாரிகள் நேரில் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், சம்மந்தப்பட்ட ஆசிரியரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் தலைக்கேறிய மது போதையில் இருப்பது உறுதியாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தலைக்கேறிய மதுபோதையில் பள்ளி அறையில் விழுந்து கிடந்த சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.