
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவை மாவட்டம் வடவள்ளியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற முகவரியே இல்லை’’ என்று விமர்சித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சொந்தமாக சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை, இன்றைக்கு காலப் பொருத்தம் இல்லாமல் பேசி வருகிறார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எப்படியாவது பிரித்துவிட முடியாதா என பாடுபட்டு வருபவர்களின் அடிமைபோல செயல்படும் அவர், தனது முயற்சியில் தோல்வியை தழுவி சித்தம் கலங்கி பேசுகிறார்.