
டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் கிளப்பிய வண்ணமிருக்கின்றன.
வரி விவகாரத்தில் சீனாவுக்கு 300% வரி என தெரிவித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் ட்ரம்ப். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை பல மடங்கு உயர்த்தியது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தார். 90 நாள்களாக இருந்த இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால் இதனை மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் லிபியா, ஈராக், அல்ஜீரியா, இலங்கை, புருனே, மால்டோவாமற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகள் மீதான பொருள்களின் இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியிருக்கிறார். குறிப்பாக, அல்ஜீரியா, லிபியா, ஈராக் மற்றும் இலங்கை நாடுகளின் பொருள்களுக்கு அதிகபட்சமாக 30 சதவீதம் வரை பரஸ்பர வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு ட்ரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், “ஆகஸ்ட் 1 முதல் பிரேசிலிய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்படும்” என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி வரி விதிப்பு நடவடிக்கையால் உலகநாடுகள் அதிர்ச்சியில் இருக்கின்றன. மேலும், காப்பர், பார்மா பொருட்கள் மீதான 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் இந்தியா பெருமளவு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.