
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு முடிந்தப்பாடில்லை.
கடந்த 5-ம் தேதி, தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியில் இருந்து அன்புமணியின் பெயரும், அவரது ஆதரவாளர்களின் பெயரும் நீக்கப்பட்டது.
இதன் பின்னர், ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்து, அன்புமணி பெயர் நீக்கப்பட்டது.
கடந்த 8-ம் தேதி, ராமதாஸ் தலைமையில் ஓமந்தூரில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட பலரும், அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தனர்.
மேலும், பாமகவில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸிற்கே உள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிற்கே முழு அதிகாரம் உள்ளது போன்ற 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணியின் தலைவர் பதவி கடந்த மே மாதம் 28-ம் தேதியோடு முடிந்தது. இதன் பின்னர், மே 29-ம் தேதி அன்று ராமதாஸ் அந்தப் பதவியில் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், ராமதாஸ் இந்திய தேர்தல் கமிஷனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தான் பாமகவின் தலைவர் என்றும், கட்சியின் சின்னத்தை அவர் தான் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.