
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
சிபில் ஸ்கோர்… இது உரிய அளவில் இல்லாவிட்டால், இன்றைக்கு வங்கிகளில் நம்மால் கடன்கள் வாங்கவே முடியாது. கிரெடிட் கார்டு கடன்கள், தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள் என வங்கிகளில் இருந்து வாங்கியவர்கள், முறையாகத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவது… மீண்டும் மீண்டும் கடன்களை வாங்குவது இதையெல்லாம் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டதுதான் இந்த ‘சிபில் ஸ்கோர்.’ ஆனால், விவசாயக் கடன் வாங்குபவர்களையும் இந்த வலையில் சிக்கவைக்க முயற்சி நடப்பது, விவசாயிகளைக் குமுற வைத்துள்ளது.
விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. நிலத்தின் அளவு, சாகுபடி செய்யப்படும் பயிர் ஆகியவற்றைப் பொறுத்து அதிகபட்சம் 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சமீபகாலமாக கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்கும் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்க ஆரம்பித்தனர். விவசாயிகள் போராட்டத்தில் குதிக்கவே, ‘கூட்டுறவுத் துறை சார்பில் சிபில் ஸ்கோர் கேட்கப்படவில்லை’ என்று தமிழ்நாடு அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூடவே, ‘தேசிய வங்கிகளில் கடன் வாங்கவில்லை’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றொரு நிபந்தனையையும் அதில் செருகியிருப்பது, விவசாயிகளை வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது.
“சிபில் ஸ்கோர் என்பது ஒருவர் வாங்கியிருக்கும் கடன்களின் அளவைச் திருப்பி செலுத்துவதைப் பற்றி சொல்வது. ஒரு விவசாயி, 1 ஏக்கரில் கரும்பு போடுவதற்கு 75,000 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்காக 40,000 ரூபாய்தான் கடன் வழங்கப்படுகிறது. மீதித் தொகைக்கு மற்ற வங்கிகளை நாட வேண்டியுள்ளது. ஆனால், மற்ற வங்கிகளில் கடன் வாங்கவில்லை என்பதை சிபில் ரிப்போர்ட்டாகக் கூட்டுறவு வங்கிகளில் கேட்கிறார்கள். இதைத்தான் வேண்டாம் என்று சொல்கிறோம்” என்கிறார், உழவர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி.
‘பற்றாக்குறைக்காகத்தான் இன்னொரு வங்கியிலும் கடன் வாங்குகிறோம். இப்படி விவசாயத்துக்காக மட்டுமே கடன் வாங்கப்படும்போது சிபில் ரிப்போர்ட் கேட்பது, கடன் தராமல் தட்டிக்கழிக்கவே’ என்பதுதான் விவசாயிகளின் குற்றச்சாட்டு.
சமீபத்தில்தான் நகைக் கடன்கள் மீது ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து, கலாட்டாவை ஆரம்பித்த ரிசர்வ் வங்கி, கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, பிறகு பின்வாங்கிவிட்டது. இப்போது, ‘சிபில்’ என்பதை வைத்துக்கொண்டு விவசாயிகளைக் கலவரப்படுத்திக்கொண்டுள்ளன கூட்டுறவு வங்கிகள்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன கூட்டுறவு வங்கிகள். விவசாயிகள் எளிய முறையில் அணுக, கூட்டுறவு வங்கிகளே பெரும் உதவியாக இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, ‘கூட்டுறவு வங்கிகள் சார்பில் சிபில் ஸ்கோர் மட்டுமல்ல… சிபில் ரிப்போர்ட்டையும் கேட்க மாட்டோம்’ என்ற உத்தரவை தமிழ்நாடு அரசே போடலாமே!
– ஆசிரியர்