• July 9, 2025
  • NewsEditor
  • 0

பர்மியக் கவிதைகள் தனது வரலாற்றில் பெரும்பாலான காலங்களில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்புடன் நேரடித் தொடர்புடையவையாக இருந்தன. மேற்கத்திய நாடுகளில் நம்பமுடியாத அரசியல் சுழற்சி, பெரும் போராட்டமாக உருவெடுத்தது. 1962 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதும், பர்மாவின் கலையும், கலாச்சாரமும் அரசியலில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டன. அப்போது பர்மாவை, ‘கற்களால் மூடிய குகை’ என்று சொல்லத்தொடங்கினர். ‘ஒரு சிறந்த கலாச்சாரம் பாழடைந்த பழுப்பு நிறத்தில் மாற்றியமைக்கப்பட்டது’ என்று பர்மியக் கவிஞர் யூ பை கூறுகிறார்.

மாபெரும் பனிப்பாளத்திற்கு அடியில்

 பெரும் பனிப்பாளத்திற்கு அடியில்

உயிருடன் புதைக்கப்பட்ட ஒரு பெரிய நாடு.

 

பெரிய நாட்டின் அடியில்

கடவுளுக்கும் புகலிடமில்லாத

ஒரு பெரிய தேவாலயம்.

 

பெரிய தேவாலயத்தின் அடியில்

ஆறடிக்குக் கீழாக

ஒன்றன்பின் ஒன்றாகப் பற்றிக்கொண்ட

பெரும் போர்கள்

போர்

 

பெரும் போர்களுக்குப் பின்

பாழடைந்து, பழுப்பேறிப்போன

பெரும் கலாச்சார அருங்காட்சியகம்

பெரிய அருங்காட்சியகத்தின் அடியில்

நாணய மதிப்பில்லாத ரூபாய் நோட்டுகள்

 

ரூபாய் நோட்டுகளுக்கடியில்

துருத்திய எலும்புகளும் குழிந்த கண்களும்

கொண்ட அடிமைகள்

அடிமைத்தனத்தின் அடியில்

கற்களால் மூடப்பட்ட ஒரு கற்காலக் குகை

– மௌங் யூ பை

[ நூல்: காயங்களால் மறைக்கப்பட்டவர்கள் ]

பர்மாவில் கவிதை என்பது வெறும் கலை வடிவமாக மட்டுமின்றி, மக்கள் இயல்பாக வாழும் வாழ்க்கையின் துயரங்களைத் திரும்பிப் பார்க்கத் தூண்டும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. கவிதையை எழுதியவுடன்   வெளியீடு  மிகவும் எளிதானது. ஆனால் தொடக்கத்தில் ராணுவ சர்வாதிகாரத்தின் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டு, கவிஞர்கள் முதற்கட்ட சோதனைகளை, தணிக்கையைத் தாண்டிய பின்னரே, தனது படைப்புகளை வெளியீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அதனால் நேரடிக் கவிதைகளுக்கு வழியின்றி, அதிநுட்பமாக, மறைமுகமாக, உருவகங்களுடன் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகளை நேரடியாகக் கூறாமல், மொழிக்குள் ஊடாடும் மொழியாகக் கவிநயத்துடன் கூறிவந்திருக்கின்றனர்.

உள்ளத்துள் உள்ளதுதான் கவிதை. அது உண்மைத் தன்மையுடன் வாழ்வின் துயரங்களை, அதன் சாரத்தை எந்த மொழியில் வெளிப்படுத்தினாலும் சேரவேண்டிய இடத்தை அடைந்துவிடும். இருண்ட காலத்திற்கு வெளிச்சமாகவும், அமைதிக்கு நடுவே எதிர்ப்பாகவும் திகழ்ந்துகொண்டிருக்கின்றன.

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி பர்மாவிற்குச் சென்றபோது, ‘இந்தியாவில் பிறந்த புத்தர் பர்மாவில் தனது கொள்கைகளைப் பரப்பி உபதேசம் செய்திருக்கிறார். பொறுமையோடும் சகிப்புத்தன்மையுடனும் இந்த நாடு ரத்தம் சிந்தாமல் விடுதலை பெறவேண்டுமெனக் கோருகிறேன்’ என்று சொல்லிச் சென்றார். அதன்படி, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி, வீட்டுச் சிறையிலிருந்து கொண்டு அறவழியில் ராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராட்டத்தை நடத்திவருகிறார். நூறு வயதுவரையில் அவர் தனிமைச்சிறையில் இருக்கவேண்டுமென்பதுதான், ராணுவம் அவருக்குக் கொடுத்திருக்கும் தண்டனை.

1870-களில் தமிழகத்தில் மிகப்பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. தாதுவருடப் பஞ்சம் என்று நினைவுகூரப்படும் அப்பஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துபோயினர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே வேறுநாடுகளுக்குப் புலம்பெயரும் நிலை ஏற்பட்டது. அப்போது ஆங்கிலேயர்கள் தங்கள் காலனி நாடுகளில் வேலை செய்வதற்காகக் கூலித்தொழிலாளர்களாக ஏழைத் தமிழர்களை அழைத்துச் சென்றனர்.

சொந்த ஊரைவிட்டுக் கூலிகளாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விரும்பவில்லையெனில், அப்போதிருந்த பஞ்சத்தில் அவர்கள் இறந்து போய்விட வேண்டியதுதான். மாத்தளை சோமுவின் ‘பர்மாவும் தமிழர்களும்’ இந்தப் புலம்பெயர்வைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அக்காலகட்டத்தில், மலேசியா போன்ற பலநாடுகளுக்கு மக்கள் கூலி வேலைசெய்வதற்காகப் புலம்பெயர்ந்து சென்னர்.  ஆனாலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, பர்மாவுக்கு சென்று தமிழர்கள் குடியேறுவது நிகழ்ந்திருக்கிறது. ஐராவதி நதியின் வழி தமிழர்கள் பர்மாவுக்குச் சென்று கால் வைத்திருக்கிறார்கள்.

 வெளிநாட்டினரின் வருகையால் ரங்கூன் மற்றும் இதர பகுதிகளில் பொருளாதாரம் பின்தங்கியது. தீவிர பர்மிய பௌத்தர்கள், பௌத்தர் அல்லாதவரிடம் பர்மிய நாட்டினர் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக இந்தியர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி எழுந்தது. பர்மிய – இந்தியத் தொழிலாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரமாக மாறி, முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களைக் கொன்று நதிக்குள் தள்ளியிருக்கிறார்கள்.  

‘கல்வெட்டு இல்லை

கல்லறை இல்லை, எலும்பு இல்லை

சாம்பல் கூட இல்லை

—-

என் மரணம் கூட உண்மையானது அல்ல

மரணத்தில்கூட நான் நாடுகடத்தப்பட்டேன்

அவர்கள் என்னைத் துடைத்தெறிந்துவிட்டனர்

வரலாற்றிலிருந்து துப்புரவாக…

என்று ஜேயர் லின் எழுதுகிறார்.  

பர்மா

காடுகள் நிறைந்த ஊரான பர்மாவிலிருந்து தேக்கு மரங்கள் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. ஸ்வர்ணபூமி என்று தங்கம் விளையும் பூமியாகப் பார்க்கப்பட்ட நாடு பர்மா.  ஆனால், அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து மக்கள் செல்கிறார்கள். சிங்கப்பூருக்கு வீட்டுவேலைகள் செய்வதன் நிமித்தம் பெரும்பாலும் இளம்பெண்கள் அதிகம் வருகின்றனர். தனகா என்னும் முர்ராயா மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட பொடியை, சந்தனம் போல் இரண்டு கன்னங்களிலும் வட்டமாகத் தடவிக்கொண்டு, சாலைகளில்  கையில் நாய்க்குட்டியைப் பிடித்துக்கொண்டு யுவதிகள் நடந்துசெல்வதைக் காணமுடியும். சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கலவையை முகத்தில் பூசிக்கொள்வதை பர்மியப் பெண்கள் பாரம்பரியமாக வைத்திருக்கின்றனர்.

மியான்மாரின் இலக்கியம், எதிர்ப்பும் இசையுமாக வாழ்தலின் அடையாளமாக முகில்களில் விரிகிறது. உலகக்கவிதை மரபில், பெரும்பாலும் கலை மற்றும் அழகியல் கூறுகளாகவே கவிதை கருதப்படும் போது, பர்மியக் கவிதைகள் அரசியல் எதிர்ப்புக்கும், அடக்குமுறைக்கும் எதிராக  மனிதநேயம் சார்ந்தவற்றை வெளிப்படுத்தின.

 

நகரப் பெண்ணுடன் ஒரு மாலைப்பொழுது

நாம் இப்பொழுதுதான் வேடிக்கைப் பார்த்தோம் ஓய்வாக

படபடக்கும் மீனைக் கவ்விவிட்டு

மீனின் வாலை மிதித்த

தெருவிலுள்ள சுறுசுறுப்பான சிங்கத்தின் சிலையை.

என்ன ஒரு வேட்டை!

என்னைப் பொறுத்தவரை

பசியால் வாடும் புலி

கைவிடப்பட்ட ஒரு புலி

ஒரு தனித்த புலி

நான் என் சொந்த வரிகளைக்

கடித்து விழுங்க விரும்புகிறேன்

என் ஆடும் வாலின் ஒலியை

நான் மறைக்க வேண்டும்

—-

– பண்டோரோ

– [ நூல்: காயங்களால் மறைக்கப்பட்டவர்கள் ]

புலி

இந்தக் கவிதையில் தலைகளை வேட்டையாடும் சிங்கமும் மீனும் குறியீடாகின்றன.   புலி, தனது சொந்த வரிகளைக்  கடித்து விழுங்கவேண்டும்.  ஆடும் வாலின் ஓசையை மறைத்துக்கொள்ள வேண்டும்.

கீழுள்ள கவிதையில்   குளிர்கண்ணாடிக்குள் இதயமும், பொருத்தமற்ற காலணிக்குள் தலையும் சிக்கிக்கொண்டிருக்கிறது .

இப்போது என் இதயம்

ஒரு ஜோடி குளிர்க்கண்ணாடிகள் மூலம்

தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

என் தலையிலுள்ள கால்களை

என் கால்களில் உள்ள தலைக்கு

வெளியே அனுப்பிவிட்டேன்

நன்கு ஒத்திகை நடத்தி அடியெடுத்து வைப்பதற்காக.

 

இப்போது என் தலை

பொருத்தமற்ற காலணிகளில் சிக்கிக்கொண்டுள்ளது.

– திட்ஸர் நி

[நூல்: காயங்களால் மறைக்கப்பட்டவர்கள்]

இலக்கியம் மிகவும் தாராளமயமாகவும் மதச்சார்பற்றதாகவும் வளர்ந்ததால், கவிதை பர்மாவில் மிகவும் பிரபலமான இலக்கியவடிவமாக மாறியது. பர்மிய மொழியின் நெகிழ்வுத்தன்மை, அதன் ஒற்றையெழுத்துச் சொற்கள் சந்தப் பாடல்களுக்கு எளிதாக இருந்திருக்கின்றன. பர்மிய இலக்கியத்தை வளர்ப்பதில் பௌத்த துறவிகள் செல்வாக்கு செலுத்தினர்.

 பதினைந்தாம் நூற்றாண்டில், மூன்று முதன்மைக் கவிதை வகைகள் தோன்றியிருக்கின்றன. அவை: ‘பியோ (Pyo) ஜாதகக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட கவிதைகள், கோவில்கள், மதவழிபாடுகள் பற்றியனவாக இருந்தன. அவை ஆன்மீகத்தை, பௌத்த மதத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. லிங்கா(Linka) கவிதைகள் மெய்யியல் சார்ந்தவையாக, இயற்கை அழகை முன்னிருத்தின. மௌகொன் (Mawgoun) கவிதைகள் புகழ்ச்சியும், வரலாறு சார்ந்தும் மன்னர்களைப் புகழ்தல், ஆட்சி, அரசியல் போன்ற கருப்பொருள்களில் இருந்திருக்கின்றன.  

ராணுவ ஆட்சி வந்தபிறகு, மியான்மர் அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகக் கட்டுப்பாடான நாடாக மாறியது.  கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தத் தடுமாறினர். சமகாலக் கவிதைகளில் இம்மாதிரியான வடிவ சிக்கல்களுக்குள் அடங்காமல், வடிவங்கள் மாறியிருக்கின்றன.  பிறகு வந்த கவிஞர்கள் மாற்றுக்கவிதைகளை, புதிய வடிவங்களை அதற்கான புதிய வழிகளை உருவாக்கினர்.

21 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண் கவிஞர்கள் முன்னணி இடத்தைப் பிடித்தனர். பெண்களின் அனுபவங்கள், அடக்குமுறையின் தாக்கங்கள், தனிமை மற்றும் வாழ்வியல் விருப்பங்கள் இவற்றை நேர்மையாகவும் நுட்பமாகவும் அவர்கள் கவிதைகள் சொல்கின்றன.  

கவிதைகள்

சமகாலப் படைப்புகள் சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் ஆகியவைமூலம், பர்மியக் கவிதைக்குப் புதிய களங்களைத் திறந்தன. இளைஞர்கள், புலம்பெயர்ந்தவர்கள், இராணுவ ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் கவிதையை வெளிப்பாட்டு உரிமையாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அண்மையில் ராணுவக் குடியுரிமை மறுப்புக்குப்பிறகு, கவிதைகள் மீண்டும் போராட்டக் கருவிகளாக மாறின. சில வரிகள், மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்தன.

மொழியின் உயிரும் நிழலுமாக மியான்மர் கவிதைகள் இருந்தாலும், அரசியல் கட்டுப்பாடுகளுக்கு நடுவில் பொறுமையுடன் வாழ்வதே சவால். உணர்வுகளை நேரடியாகச் சொல்லமுடியாத சூழ்நிலைகளில் மக்கள் அடிபணியத் தொடங்கினர். இது ஒரு போராட்டம். இது ஒரு கருணை. இதுவே அழகியல். இதுவே கொடுமை என்றவாறு சமகாலக் கவிதைகள் நுட்பமாக உணர்வுகளைப் பதிவுசெய்கின்றன. ஐந்திராவின் கவிதை இது.

அந்த நாள்

( அந்த நாளுக்கு முந்தைய நாள்)

 

அந்த நாளுக்கு முந்தைய நாள்

ஒரு வேட்டைக்காரி தன் மூச்சை

நிறுத்திக்கொண்டாள்

அந்த நாள் தன்னைத்தானே நிர்மூலமாக்கிக்கொண்டது

அந்த நாள் என் காயங்களுக்குக் கட்டுப்போட்டது

 

மரணத் தண்டனை நிறைவேற்றுபவரின்

குரூர ரத்தத்துடனான அந்த நாள்

தன்னைத் தானே புனரமைத்துக்கொள்ள

தைரியம் தேவைப்பட்டது…

மன அழுத்தங்களைத் தாண்டி, குரல்கள் தொடர்ந்து எழுந்தன. முடக்கங்களை மீறி, வார்த்தைகள் உயிர்பெற்றன.  மௌனம் காக்க வேண்டிய கட்டாயச் சூழலிலும் மியான்மர் கவிதைகள் பேசத் தெரிந்தவை.

 பர்மாவில் மிகவும் செல்வாக்குமிக்கக் கவிஞராக ஜீயர் லின் பரவலாக அறியப்பட்டவர். மேலும் அவரது கவிதை Sling Bag அதிகம் பேசப்பட்டது. ஜீயர் தொடர்ச்சியான கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். மேலும் சில்வியா பிளாத், ஜான் ஆஷ்பெரி, சார்லஸ் பெர்ன்ஸ்டீன் ஆகயோரின் கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார்.

தொங்கு பை

 

அவன் எங்குச் சென்றாலும், தன் தொங்குபையில்

துண்டிக்கப்பட்ட தன் காலைச் சுமந்துசெல்கிறான்

அவள் கைகுலுக்க வேண்டுமென்றால்

தந்து துண்டிக்கப்பட்ட காலை

அந்தப் பையிலிருந்து வெளியே எடுக்கிறான்.

—–

 

துண்டிக்கப்பட்ட கால்

அவன் தூங்கும்போது

அவனது தலையணையாகிறது

துண்டிக்கப்பட்ட கால்

அவன் சாப்பிடும்போது

உணவு மேசையில் வைக்கப்படுகிறது

 

—-

துண்டிக்கப்பட்ட கால்தான்

தனது கடந்த காலம்

தனது நிகழ்காலம்

தனது எதிர்காலம்

எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது வாழ்க்கை

—-

          – ஜேயர் லின்

மௌனத்தின் மீதும் மனிதத்தின் மீதும் எழுதப்பட்ட பர்மியக் கவிதைகள் எழுப்பும் பரிதாபக் குரல்கள், அந்த மண்ணின் மௌனமும் சேர்ந்த அந்த மக்களின் வெளிப்பாடுகளே. இதைப் புரிந்துகொள்ள ஜேம்ஸ் பைர்னும் கோ கோ தெட்டும் தொகுத்த நூல் ‘Bones Will Crow’ என்ற தொகுப்பு, இதிலுள்ள பெரும்பான்மையான கவிதைகளைத் தமிழில் பா. இரவிக்குமார், ப.கல்பனா இருவரும் மொழிபெயர்த்து ‘காயங்களால் மறைக்கப்பட்டவர்கள்’ என்ற நூல் பரிசல் வெளியீடாக வந்திருக்கிறது.

 போர்க்குழுக்கள், அரசியல் கைதிகள், நடனக் கலைஞர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள். ஆகியோரது கவிதைகள் அத்தனை சுருக்கமாக, துடியாக, ஒரு மண்வெட்டியின் இரைச்சலையும், ஒரு பூவின் நிசப்தத்தையும் ஒரே வரியில் சொல்லும் வல்லமை கொண்டிருக்கின்றன.

புத்தரின் கொள்கைகளைச் சுவாசித்த பர்மா தற்போது அமைதி சிதறி அடக்கப்பட்ட நிலையில் உள்ளது. அதனூடாக நிலைத்து நிற்கும் உயிர்களின் சுவாசம் கவிதைகளில் கேட்கின்றன.

பர்மா, கவிதை படைப்பவருக்கு மிகுந்த சவால்களையும், அதே சமயம் அதுதான் கடமை என்ற உணர்வையும் கொடுத்திருக்கிற நிலம். ராணுவ ஆட்சித் தொடங்கி, சீரற்ற அரசியல், பயமுறுத்தும் வன்முறை இயக்கங்கள், துண்டிக்கப்பட்ட சுதந்திரத்துக்குள் நாடு சிக்கிக்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் எழுந்த கவிஞர்களுக்கான எழுத்து, ஒரு குரல் மட்டுமல்ல; அது எதிர்ப்பு, சாட்சியம், ஆழமான ஆதங்கம். ராணுவத்தின் கண்ணில் கவிஞன் ஒரு சிக்கலானவனாகவே இருக்கிறான். கலை என்பது ஒருபுறமாகஉரிமைக்கொண்டாடும் நிலையில், அரசாங்கத்தால் கவிஞர்களின் பெயர்களே அழிக்கப்படக்கூடிய சூழல். சிலர் புனைபெயர்களில் எழுதியுள்ளனர்,  சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். ஆனால் கவிதை மட்டும் இடம் மாறாமல் அதே உண்மையோடு வீசி வருகிறது.

 மௌனத்தின் மொழியாய், துக்கத்திற்கும் எதிர்ப்பிற்கும் இடையில் பர்மியக் கவிதைகளின்  அமைதி என்பது வீழ்ச்சியல்ல; அது உறுதியுடன் நினைவுகளின் மென்மையான எதிரொலி.  கவிஞர் ஆங் சேய்ட் எழுதியது போல So, you are a hamburger, aren’t you? இடையில் சிக்கிக்கொண்டிருப்பது இவர்களின் வாழ்க்கை மட்டுமே.   

“தோட்டத்தில் ஒரு சடலம் கரைகிறது,

இன்னும் அந்தப் பொட்டலத்திலிருந்து

உப்புச் சேர்க்கப்பட்ட வேர்க்கடலையை

மென்றுகொண்டிருக்கிறேன்”

மௌனம் என்பதே இங்hd மொழி. மரணம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்கூட உப்பு போட்டு வேர்க்கடலையை மென்று கொண்டிருக்க வேண்டிய சூழல். இன்னும் உப்பு என்பது  அறிகுறிதான் என்ன செய்வது? கடலையைத் தின்று வாழ்க்கையை வாழவேண்டியிருக்கிறதெனக் கிண்டலுடன் நிற்கிறது கவிதை. பர்மியக் கவிதைத் தருணங்களில்  துக்கமும் நகைப்பும் கலக்கின்றன.  சமயச்சிந்தனையின் நீண்ட உளவியல் பாதையை உற்று நோக்கி, பௌத்தம் எங்கே போனதென கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.   

பர்மாவின் அரசியல் மாறலாம். அந்த மண்ணின் வளர்ச்சியைத் தடுக்கலாம். ஆனால் கவிதைகள் அந்நிலத்தின் உயிராக வாழும்.  மீண்டும் எழும், மீண்டும் புதைந்துபோகும், எழுந்து வரும். அக்கவிதைகளுக்குள் சென்று வாசிப்பவன், ஒரு மூடிய கதவைத் திறந்து ஒரு மண் உணரும் அழுத்தங்களை வாசிக்க முடியும். புலன்களுக்குள் சொருகும் சத்தமில்லாத உணர்வுகள். அதுவே அதன் அழகு. அதுவே அதன் அரசியல். அங்கே, எழும் வரிகள் சத்தமில்லாத மரணங்களுக்கான சாட்சியமாக இருக்கக்கூடும். ஒவ்வொரு கவிதையும், மறைக்கப்பட்ட வரலாற்றின் ஒளிக்கெதிராக எழுச்சி பெறக்கூடும்.

#சொற்கள் மிதக்கும் 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *