
திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்களும் மற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மதியம் 2:45 மணி அளவில் ஒரு வீட்டில் இருந்த சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர் வெடித்துள்ளது. தொடர்ந்து அருகருகே இருந்த வீடுகளில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்துள்ளது.
இதில் 42 வீடுகளும் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்தன. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு,வடக்கு தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாடகைக்கு ஆசைப்பட்டு தகரக் கொட்டகைகளை சிறிது சிறிதாக வீடுகளாக அமைத்து வாடகைக்கு விட்ட நிலத்தின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நான்குக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.