
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பரவலாக பாரத் பந்த் நடைபெற்றது.
10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் நடந்த பாரத் பந்த் காரணமாக நாடு முழுவதும் பரவலாக சாலை, ரயில் மறியல்கள், கண்டனப் பேரணிகள், இருசக்கர வாகனப் பேரணிகள் நடைபெற்றன. கேரளாவில் பாரத் பந்த் தாக்கம் பரவலாக உணரப்பட்டது. அங்கே பொது, தனியார் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. குறிப்பாக, தொலைதூரங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகவே இயங்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.