
வரதட்சணைக் கொடுமையை ஒட்டிய தற்கொலை என பதைபதைக்க வைத்த ரிதன்யா மரணம், அதன்பிறகு அவருடைய அம்மாவின் பேச்சுகளின் வழியே அதில் ‘மேரிட்டல் ரேப்’ என்கிற பிரச்னை இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது தெரிய வந்தது.
இதற்கு முன்னரும் எத்தனையோ பெண்களின் உடலையும் மனதையும் நோகடித்த பிரச்னைதான் இது. இன்றைக்கும் சில பெண்கள் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிற விஷயமும்கூட. இது என்ன மாதிரியான பிரச்னை; இந்தப் பிரச்னை இருக்கிற ஆண்களை திருமணத்துக்கு முன்னரே எப்படி அடையாளம் கண்டுகொள்வது உள்ளிட்டக் கேள்விகளை சென்னையை சேர்ந்த பாலியல் மருத்துவரும், ஏஷியா ஒஷியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜியின் (Asia-Oceania Federation of Sexology) வைஸ் பிரசிடெண்ட்டுமான டாக்டர் காமராஜ் அவர்களிடம் கேட்டோம்.
”இந்தப் பிரச்னையை பொதுவாக ‘மேரிட்டல் ரேப்’ என்று மட்டுமே கடந்துவிட முடியாது. சிலரிடம், ‘சேடோமசோசிஸ்டிஸ்க்’ (Sadomasochistic behavior) என்கிற பிரச்னையும் இருக்கலாம். இதுபற்றி விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சேடிஸ்ட் என்று சொல்வோம் இல்லியா? அதாவது, மற்றவர்களை துன்புறுத்துவதில் இன்பம் காண்பவர்கள். இந்த சேடிஸம் பிரச்னை சிலருக்கு செக்ஸிலும் இருக்கும். மனைவியின் கையை, காலை கட்டிப்போட்டுவிட்டு, அடித்தபடி செக்ஸ் செய்வார்கள். இப்படி செய்தால்தான் அவர்களுக்கு செக்ஸில் உச்சக்கட்டம் கிடைக்கும். ‘Sadomasochistic behavior’-ல் அடிப்பதில் இன்பம் காண்பவர்கள் ‘சேடிஸ்ட்.’ அடிவாங்குவதன் மூலம் உச்சக்கட்டம் அடைபவர்கள் மசோசிஸ்டிஸ்க் (masochistic). இந்தப் பிரச்னையில் பெண்ணும் சேடிஸ்ட்டாக இருக்கலாம். ஆணும் அடிவாங்குவதில் இன்பம் அடைகிற மசோசிஸ்டிஸ்க் (masochistic)-ஆக இருக்கலாம். இந்த இரண்டுமே பாலியல் பிறழ்வுகள்.
இந்த இயல்பு இருக்கிற கணவனுக்கு, அடிவாங்குவதில் இன்பம் காண்கிற மனைவி அமைந்தால், இந்த விஷயம் பிரச்னையாக வெளியே வராது. ஏனென்றால், சேடிஸ்ட்டும் மசோசிஸ்டிஸ்க்கும் அடிப்பதையும், அடி வாங்குவதையும் செக்ஸில் நார்மலான விஷயம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள். ஆனால், செக்ஸில் ஒரு சேடிஸ்ட்டும் நார்மலும் இணையும்போது, நார்மலான நபரின் வாழ்க்கை பெரும் சிக்கலாகி விடும்.

பொதுவாக, செக்ஸில் நார்மலான ஒரு பெண்ணால் செக்ஸில் சேடிஸ்ட் கணவரை எதிர்கொள்ள முடியாமல் டிப்ரஷனுக்குள் விழுந்துவிடுவார்கள். இது நடந்தால், அறிவின் செயல்பாடுகள் குறைந்துவிடும். அப்போது, தன்னை மாய்த்துக்கொண்டால்தான் இதிலிருந்து வெளியே வர முடியும் என்கிற முடிவை எடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள், தங்களுடைய தற்கொலை முடிவை நெருங்கிய வட்டத்தில் சொல்வார்கள். அந்த நேரத்தில் எச்சரிக்கையாகி விட்டால், ஓர் உயிரை காப்பாற்றிவிடலாம்.
இன்னமும் நம் மக்களுக்கு செக்ஸுவல் உரிமை தொடர்பான விழிப்புணர்வு இல்லை. கணவரோ/மனைவியோ சம்மதம் கொடுத்தால் மட்டுமே அவர்களைத் தொட வேண்டும். செக்ஸில், துணைக்கு விருப்பமில்லாததை செய்யவோ, செய்யும்படியோ கட்டாயப்படுத்தக்கூடாது. கணவரோ, மனைவியோ தன் துணையை உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக துன்புறுத்தினால் அது கிரிமினல் குற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றவர், சேடிஸ்ட் ஆண்களை திருமணத்துக்கு முன்னால் எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் விளக்கினார்.
இந்த விஷயத்தில் காதல் கண்ணை மறைக்கவே கூடாது. அப்படி மறைத்தால், போர்னோகிராபி பார்ப்பவனையும், போதைப்பழக்கம் இருப்பவனையும்கூட திருமணத்துக்குப் பிறகு தன் அன்பால் திருத்திவிடுவேன் என பெண்கள் முடிவெடுத்து விடுவார்கள். ஒருதிருமணத்தில் இதைவிட தவறான முடிவு இருந்துவிட முடியாது.
பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், காதல் திருமணங்களில் சாத்தியம் இருக்கிறது. அதுவும் 2 வருடங்களாவது காதலித்தால்தான், அந்த ஆணோ/பெண்ணோ சேடிஸ்ட்டான நபரா என்பதைக் கண்டறிய முடியும். உதாரணத்துக்கு, அவருடன் பைக்கில் செல்லும்போது, குறுக்கே வந்த நபர் மீது கை ஓங்கினால், திருமணத்துக்குப் பிறகு அவர் மனைவி மீது கை ஓங்க வாய்ப்புகள் மிக மிக அதிகம். அந்த நபரிடம் கெட்ட வார்த்தைப் பேசினால், மனைவியிடமும் ஏதாவது ஒரு தருணத்தில் பேசத்தான் செய்வார்.
இந்த விஷயத்தில் காதல் கண்ணை மறைக்கவே கூடாது. அப்படி மறைத்தால், போர்னோகிராபி பார்ப்பவனையும், போதைப்பழக்கம் இருப்பவனையும்கூட திருமணத்துக்குப் பிறகு தன் அன்பால் திருத்திவிடுவேன் என பெண்கள் முடிவெடுத்து விடுவார்கள். ஒருதிருமணத்தில் இதைவிட தவறான முடிவு இருந்துவிட முடியாது.
திருமணத்துக்கு முன்னால், வாழ்க்கைத்துணையாக வரவிருப்பவரை கண்களை நன்கு திறந்து பாருங்கள். அப்போதுதான் குற்றம், குறை, அவர் சேடிஸ்ட்டா என்பன போன்ற விஷயங்கள் தெரியும். திருமணத்துக்குப் பிறகு, சிறு சிறு குற்றங்களை பெரிதுபடுத்தாமல் பாதி கண்களை மூடிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுங்கள். நிம்மதியாக இருக்கலாம். திருமணத்துக்கு முன்னால் சாதி, மதம், பணம் ஆகியவற்றை மட்டும் பார்த்து பாதி கண்ணை மூடிக்கொண்டு துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பிறகு கண்களை நன்கு திறந்துபார்த்து குற்றம் சொல்வதனால் வருத்தம் மட்டுமே மிஞ்சும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.
