
பிரான்ஸில் பிறந்து, போர்த்துகீசிய பெற்றோரால் வளர்க்கப்பட்ட கேட் என்ற பெண், சிறிய வயதிலிருந்தே தன்னைக் குடும்பத்தில் ஒரு வித்தியாசமானவராக உணர்ந்திருக்கிறார்.
@juust_kate என TikTok-இல் அழைக்கப்படும் கேட், தனது குடும்பத்தைப் பார்த்தால் தன்னைப் போல யாரும் இல்லையென்று நினைத்து, குடும்ப பின்னணியை அறிய டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இதன் முடிவுகள் அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டன. குழந்தைப் பருவத்திலிருந்தே பண்டைய எகிப்து நாகரிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கேட், தனது தோற்றம் குறித்து மக்கள் அடிக்கடி கேள்வி எழுப்பியதால், தனது பாரம்பர்யத்தை அறிய ஆர்வமடைந்தார்.
இதனையடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்த கேட், ஆறு வாரங்களுக்குப் பிறகு முடிவுகளைப் பெற்றிருக்கிறார். முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் கேட். 58.4% எகிப்திய, 22.9% போர்த்துகீசிய, 14.1% இத்தாலிய, மற்றும் 4.6% அல்ஜீரியப் பாரம்பர்யம் என முடிவுகள் வந்துள்ளன.
85% போர்த்துகீசிய வம்சாவளியை எதிர்பார்த்த கேட்டுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது தாயிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “நாம் அனைவரும் உலகின் குழந்தைகள்” என்று பதிலளித்திருக்கிறார்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் தாயிடம் கேட் விசாரித்தபோது, கேட்டை வளர்த்தவர் அவரது உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்தது. அவரது உண்மையான தந்தை ஒரு எகிப்தியர், அவர் ஏற்கனவே மறைந்திருக்கிறார்.
இந்த உண்மை அந்தப் பெண்ணுக்கு உணர்வுப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், எகிப்தில் மூன்று சகோதரர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் உறவை வளர்த்துள்ளார்.
இந்தப் புதிய குடும்ப இணைப்பு அவருக்கு மகிழ்ச்சியையும், புதிய கலாசார தொடர்பையும் வழங்கியிருக்கிறது.