
சென்னை: “பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம் கலங்கியது; மன வேதனை அடைந்தேன். அதிமுக ஆட்சிதான் வர வேண்டும் என்று எனது கரங்களைப் பிடித்து கவலைகளைத் தெரிவித்தனர்” என்று கோவை பிரச்சார சுற்றுப் பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அதிமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில்: ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்த போது ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களில் ஒரு சில… ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன் எனது எழுச்சிப் பயணத்தை கோவையில் ஜூலை 7 அன்று துவங்கினேன். மக்களின் அளவற்ற அன்பும், பேராதரவும் என்னை, அவர்களில் ஒருவனாகவே எண்ணச் செய்தது. ஆனால், மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள், கவலைகள், வேதனைகள், அவர்கள் படும் அல்லல்கள், சோகங்கள் சொல்லொண்ணாதவை.