• July 9, 2025
  • NewsEditor
  • 0

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை இயக்க அதிகாரியாக (Chief Operating Officer) சபிஹ் கான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பில், “நிறுவனத்தின் Senior Vice President of Operation அதிகாரியாக இருக்கும் சபிஹ் கான், இந்த மாத இறுதியில் ஜெஃப் வில்லியம்ஸ் வகித்துவந்த தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு மாறுவார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தில் 1995-ல் பணிக்கு சேர்ந்த சபிஹ் கான் தனது 30 ஆண்டுக்கால அனுபவம் மற்றும் திறமையால் இந்த உயரிய பதவிக்கு முன்னேறியிருக்கிறார்.

Sabih Khan – சபிஹ் கான்

இவரைப் பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், “சபிஹ் ஒரு சிறந்த மூலோபாயவாதி. ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியின் மையக் கட்டமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மேம்பட்ட உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை முன்னோடியாகக் கொண்டுவர உதவியுள்ளார்.

இவை எல்லாவற்றுக்கும் மேல், தனது மதிப்புகளால் சபிஹ் கான் முன்னிலையில் இருக்கிறார். நிச்சயம் சிறந்த தலைமை இயக்க அதிகாரியாக இருப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்று புகழ்ந்திருக்கிறார்.

மேலும், இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் சபிஹ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சபிஹ் கான்?

சபிஹ் கான் 1966-ம் ஆண்டு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். சபிஹ் கானின் பள்ளிப்பருவத்திலேயே அவரின் குடும்பம் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது.

பின்னர் அங்கிருந்து, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றின்படி, அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) பொருளாதாரம் மற்றும் இயந்திர பொறியியலில் இரட்டை இளங்கலை பட்டம் பெற்ற சபிஹ் கான், நியூயார்க்கில் உள்ள ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் (Rensselaer Polytechnic Institute) இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

Sabih Khan - சபிஹ் கான்
Sabih Khan – சபிஹ் கான்

அதைத்தொடர்ந்து, ஜே.இ பிளாஸ்டிக்ஸ் (GE Plastics) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த சபிஹ் கான், 1995-ல் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்முதல் குழுவில் (Procurement Team) பணிக்கு சேர்ந்தார்.

மார்க்கெட்டுக்கு ஆப்பிளின் புதுப்புது தயாரிப்புகளைக் கொண்டுவருவதிலும், நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டு உத்தியை வடிவமைப்பதிலும் முக்கிய பணியாற்றிய சபிஹ் கான், 2019-ல் Senior Vice President of Operation பதவியில் அமர்த்தப்பட்டார். இப்போது ஆப்பிள் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் அனுபவத்துடன் தலைமை இயக்க அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *