
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பெரிதளவில் பேசப்பட்ட அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு, அவருடைய அடுத்த படத்திற்குப் பலரும் காத்திருக்கின்றனர்.
’96 2′, மற்றொரு நடிகருடனான படம் என அவர் அடுத்ததாக எடுக்கவிருக்கும் திரைப்படங்கள் பற்றி சினிமா வட்டாரத்தில் பல தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன. இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அந்தக் காணொளியில் பிரேம் குமார், “தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அது இப்போது பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இன்று பல விமர்சகர்கள் இருக்கின்றனர். நான் அனைத்து விமர்சகர்களையும் இதில் சொல்லவில்லை.
சில விமர்சகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்கள் பேசும் தொனி என அனைத்தும் எதிர்மறையாக இருக்கின்றன. படம் வெளியான பிறகு முதல் வாரத்தை அவர்கள் இலக்காகக் கொள்கின்றனர்.
அவர்கள் ஒரு அஜெண்டாவை வைத்து இதனைச் செய்கின்றனர். ஒரு திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் படத்திற்கு வசூல் வந்துவிட்டால், தயாரிப்பாளர் தானாகவே அவருடைய அடுத்த படத்தை உங்களுக்குக் கொடுப்பார்.

பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்வது இப்போது 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துவிட்டது. நேர்மையான விமர்சகர்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். நேர்மையான விமர்சகர்களிடம் ஒரு படத்தைச் சரியாக விமர்சனம் செய்வதற்குப் போதுமான திறமைகள் இல்லை.
ஓரிரு நபர்களால் மட்டுமே நல்ல விமர்சனங்களைக் கொடுக்க முடிகிறது. அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களே இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களைத்தான் பார்க்கின்றனர். இப்படியான விமர்சனங்களை வைத்து, திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா என முடிவு செய்கின்றனர்.
இந்தப் பிரச்னையைப் பரிசீலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சில விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…