
நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் வைஃப்’ வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இதே தலைப்பிலான அமெரிக்க வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக இதனை எடுத்திருக்கிறார்கள். இந்த சீரிஸில் ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த சீரிஸின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.
இதில் நடிகர் சம்பத் ராஜ், ‘கோவா’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை வைத்து தனது மகளைக் கிண்டல் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோவா’ திரைப்படத்தில் சம்பத் ராஜ் தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பார்.
“இந்த சீரிஸில் நீங்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தைப் பலரும் தேர்வு செய்து நடிப்பதற்குத் தயங்குவார்கள். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?” என்ற கேள்விக்குப் பதிலளித்த நடிகர் சம்பத் ராஜ், “இது வெறும் ஒரு கதாபாத்திரம்தான். இப்படியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சேலஞ்ச் தேவையில்லை. நம்பிக்கைதான் தேவை. எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.

எனக்கு ஒரு கேரக்டர் இருக்கிறது. அதையெல்லாம் மீறி நாம் வேறு ஒரு விஷயத்தைச் செய்யப் போகிறோம். அதில் நாம் நம்பிக்கையாக இருப்பதுதான் முக்கியம்.
முக்கியமாக, இந்த சீரிஸில் நான் நடிப்பதற்கு முன்னால் என் குடும்பத்தில் யாரைக் கேட்க வேண்டுமோ, அவர்களைக் கேட்டேன். நான் இதைச் செய்யப் போகிறேன், சரியா என்று கேட்டு உறுதி செய்த பிறகுதான் நடித்தேன்.
என்னுடைய மகள் 4-ம் வகுப்பு படிக்கும்போது, நான் ‘கோவா’ படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை வைத்து என் மகளைக் கிண்டல் செய்தார்கள்.
என் மகள் அப்போது சிறு பெண்ணாக இருந்தாள். நிறைய பேர் பல விஷயங்களைச் சொல்லும்போது, என் மகளுக்கு என்ன பதில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது.

இப்போது அவள் வளர்ந்துவிட்டாள். ஆனாலும் நான் அவளிடம் கேட்க வேண்டும். அதே சமயம், என் வாழ்க்கையில் இருக்கும் இன்னொரு பெண்ணிடமும் கேட்க வேண்டும்.
அப்படி இந்தக் கதாபாத்திரம் பற்றி விளக்கி, அவர்களின் கருத்தையும் கேட்ட பிறகுதான் நடித்தேன்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…