
பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பீகாரில் தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள்வரை தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.
இதற்கிடையில், என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், மாநில அரசியலில் ஈடுபடப்போவதாகவும், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் பீகார் அரசியலில் நடந்துவந்த நிலையில், சிராக் பாஸ்வான், “வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முடிவு செய்யும் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், அவர் மாநில அரசியலில் முழுமையாக ஈடுபடவிருக்கிறார் என்ற செய்தி உறுதியாகியிருக்கிறது.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “என் தந்தை 2014 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதைக் கடுமையாக எதிர்த்தார். ‘நீ பா.ஜ.கவுக்குச் சென்றால் நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன்’ எனக் கூறினார். அதனால் 2014-க்கு முன்பு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.
2013 நவம்பர் முதல் 2014 பிப்ரவரி நடுப்பகுதி வரை மரியாதைக்குரிய சோனியா காந்தியைப் பலமுறை சந்தித்தோம்.
ஆனால் அவர் அப்போது காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல் காந்தியைச் சந்தித்து பிரச்னைகளைச் சரி செய்துகொள்ளலாம் என்றார். ஆனால், இறுதிவரை ராகுல் காந்தியைச் சந்திக்கவே முடியவில்லை. அதன் பிறகே பா.ஜ.க-வில் இணைந்தேன்.
நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். 243 இடங்களிலும் என் கட்சி போட்டியிடும் என அறிவிக்கிறேன். நான் எனக்காக அல்ல, பீகார் மக்களுக்காகவே போட்டியிடுவேன்.
நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எனது கூட்டணி பீகார் மக்களுடன் மட்டுமே. பீகாருக்காகவும், மாநில மக்களுக்காகவும்… மாநிலத்தின் பெருமைக்காகவும் நான் வாழ்ந்து இறப்பேன்” என்றார்.
ராம் விலாஸ் பஸ்வான்:

மத்தியச் சேவை அமைச்சர், பொருளாதார அமைச்சர், ரயில்வே, தகவல் தொழில்நுட்ப, கனிமப் பொருட்கள், நுகர்பொருள்கள் முதலிய துறை அமைச்சர் எனப் பல்வேறு துறை அமைச்சராக இருந்தவர் ராம் விலாஸ் பஸ்வான். சிராக் பஸ்வானின் கூற்றுப்படி 6 பிரதமர்களின் கீழ் ராம் விலாஸ் பஸ்வான் பணியாற்றியிருக்கிறார்.
தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான இவர், காங்கிரஸ் தலைமையிலான UPA-விலும் பின்னர், மோடி தலைமையிலான NDA-விலும் அமைச்சராக இருந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்தது. இதற்குப் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிராக் பஸ்வான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.