• July 9, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வயது அறுபத்து நான்கு .

ஒடி, ஆடி வங்கியில் 38 வருடங்கள் வேலை செய்து ரிடையர் ஆனேன். குழந்தைகள் திருமணமாகி பேத்திகளும் எடுத்தாகி விட்டது. சமீபத்தில் என் அண்ணன் மகள் திருமணம் நடந்தேறியது. கூட்டமான கூட்டம். எங்கள் திருமணம் நினைவுகளை மனம் அசை போட்டது.

மார்ச் 27.,1986. வெயில் ஆரம்பிக்க தொடங்கிய சமயம். ஏசி மண்டபம் புக் பண்ணும் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் அந்த காலத்தில் ஓரளவுக்கு பெரியதாக இருந்தது.

இருவர் பக்கமும் நிறைய உறவினர் நண்பர்கள்.இப்பொழுது வாட்ஸ்அப்பில் பத்திரிகை அனுப்பி வைத்தாலே மதித்து வந்துவிடுவார்கள். அப்பொழுது உறவினர்களும் சரி.நண்பர்களும் சரி. நேரில் போய் அழைத்தால் தான் தன்னை மதிப்பதாக கருதி வருவர். வெளியூர்களில் இருக்கும் உறவினர்களும் தபாலில் பத்திரிகை அனுப்பி வைத்தால் திருப்தி இருக்காது.

இப்படியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து திருமண நாளும் நெருங்கியது.

 இப்பொழுது ஒரே வேளையிலும் திருமணத்தை நடத்தலாம்.

 அப்பொழுது இரண்டரை நாள் கல்யாணம்.

  முதல் நாள் காலை எல்லோரும் வேன் ஏறி வழியில் உள்ள பிள்ளையார் கோயிலில் சூர தேங்காய் உடைத்து விட்டு மண்டபத்தை அடைந்தோம்.

 மாப்பிள்ளை (என் கணவர்) வீட்டார் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். கெட்டி மேளம் கொட்ட ,தடபுடலாக வரவேற்பு. ஒருபுறம் திருமண சடங்குகள் சம்பிரதாயங்கள் தொடங்கின. மறுபுறம் காலை காபி டிபன் என்று  முழு மூச்சாக நடக்க ஆரம்பித்தது.

மதியம் சாப்பாட்டுக்கு பின் சிலர் ஓய்வெடுக்க ஆங்காங்கே  விரித்திருந்த ஜமக்காளத்தில் காலை நீட்டி படுத்தனர்.

மற்றொரு மூலையில் மும்முரமாக சீட்டு கச்சேரி. அப்பப்போ சமையல் அறையிலிருந்து டீ காபி சப்ளை.  பெண் உறவினர்கள்  டைனிங் ஹாலில் முகூர்த்த பைகளில் தேங்காய் வெற்றிலை பாக்கு போட்டு கொண்டு இருந்தனர். இதில் சில பைகளில் பெண்களுக்கு என்று மஞ்சள் குங்குமம் ஒரு ரவிக்கை பிட் ஒரு சிறிய எவர்சில்வர் கிண்ணம் அன்பளிப்பாக போட வேண்டி இருந்தது. அடையாளம்  தெரிய இரண்டு வகையான கலரில் பை.

மாலை 5 மணிக்கு நிச்சயதார்த்தம்.

ஏற்கனவே மூன்று மாதங்கள் முன் ஒரு நிச்சயதார்த்தம் ஒரு சிறிய ஹால் எடுத்து நடத்தி இருந்தாலும் மறுபடியும்  திருமணநாள் முன் தினமும் அதே சம்பிரதாயம்.

 இரண்டு மணிக்கு தான் சாப்பாட்டு கடை முடிந்திருந்தது. மூன்றரை மணிக்கே   நிச்சயதார்த்த டிபன். பஜ்ஜி சொஜ்ஜி , கலந்த சேவை வகைகள் காபி.

மேக்கப் போட எல்லாம் யாரும் கிடையாது. வயதான உறவினர் ஒருவர் தலையில் ராக்குடி, ஐடவில்லை குஞ்சலம் வைத்து பின்னி விட மற்றுமொரு உறவினர் பூ சுற்றினார்.  சவுரி வைத்து பின்னல் போட்டதில் அரை அடி இருந்த என் கூந்தல் என் உயரத்தில் முக்கால் உயரத்தை தொடாத குறை. அப்பவே தலை ஒரு ஒரமாக விண் விண்ணென்று தெரிக்க ஆரம்பித்தது. ஒரு க்ரோஸின் மாத்திரையை வாங்கி முழுங்கினேன்.

எங்களுடைய  பில்டிங்கில் இருக்கும் இந்துமதி என்பவர் எனக்கு மேக்கப் போடுகிறேன் என்று சொல்லி  நேரத்திற்கு வந்து சேர்ந்தார். தன்னிடம் உள்ள க்ரீம் லோஷன் லிப்ஸ்டிக் எடுத்து வந்தார்.

காசு பணம் செலவில்லாமல் மேக்கப்.

இப்பொழுது  நடக்கும் திருமணத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மேக்கப். மணப்பெண்ணுக்கு ஒரு இரண்டு லட்சம் என்றால் சுற்றி இருக்கும் நெருக்கமான  உறவினர்களுக்கான மேக்கப் செலவு இன்னும் ஒரு லட்சம்.

ஒரு வழியாக நிச்சயதார்த்தம் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூரில் இருக்கும் உறவினர் மற்றும் நண்பர்கள் வரத் தொடங்கினர்.

ஓரளவுக்கு  எத்தனை பேர் அழைத்து இருந்தோம் என்று தெரிந்திருந்தும் முதல்நாள் மாலை இந்த கூட்டம் எதிர் பார்க்கவில்லை. வாய் வார்த்தையாக எல்லோரும் வந்து நடத்தி கொடுக்குமாறு சொல்லி பத்திரிகையிலும் காலை பந்தக்காலில் இருந்து ரிசப்ஷன் வரை தேதி  நேரம் , லன்ச் டின்னர் என்று குறிப்பிட, எல்லோரும் இரண்டு நாள் கிச்சனை மூடி விட்டார்கள் போலும் .

அப்பொழுது காண்டிராக்ட் விடுவதில்லை. மளிகை சாமான்கள் முதல் பூ இத்யாதிகள் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த மளிகை சாமான்கள் கேட்கும் போது எடுத்து கொடுக்க ஒரு சில நண்பர்கள்  முன் வந்தார்கள்.. முதல் நாள் நிச்சயதார்த்தம் டின்னர் முடிந்தபின் சமையல்காரர் வந்து  மீதி இருப்பதை பார்த்து மேலும் வாங்க வேண்டும் என்று சொல்ல, மளிகை கடைக்காரர், காய்கறிகாரர் இருவருக்கும் ஃபோன் போட்டு சொல்லி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து இறங்கியது.  என் பெற்றோருக்கு நான்  ஐந்தாவது குழந்தை. என் அப்பா 65 வயதை தாண்டிய நிலையில் இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து அன்று படுக்கும்போது மணி ஒன்று.

மறு நாள் முகூர்த்தம் 7.30 -9 முகூர்த்தம். காசி யாத்திரை ஊஞ்சல் என்று 6 மணிக்கு ஆரம்பம்.

 3.30 மணிக்கு எழுப்பி விட அரை கண் திறந்த வண்ணம்  பல் தேய்த்து, காபி குடித்து, குளித்து வர ,மறுபடியும்  நீண்ட பின்னல். தலை கொள்ளா பூ.  

எனக்கு இப்படியிருக்க, நடுவில் ஒரு ஐந்து நிமிடம் டிபன் சாப்பிட்டு கை கழுவும் இடத்தில் இவரை சந்தித்தேன். அவர் விதத்திற்கு அவர் புலம்பல். மாடி ரூம் ஆஸ்பெஸ்டாஸ் போல. ஃபேன் ஓடினாலும் உடம்பில் ஒட்டாத காத்து.

திரும்பி படுத்தால் ஒரு பக்கம் வேர்வை தொப்பலாக. போதாததற்கு கொசு வேறு காதில் ரீங்காரம். போதிய தூக்கம் இல்லாமல் கண் சிவந்திருப்பதை பார்த்து ஜோக் அடிப்பதாக நினைத்து யாரோ உறவினர் இவரிடம் ‘என்னப்பா ராத்திரி நண்பர்கள் கூட ஃபுல்லா’ என்று கேட்க செம்ம கடுப்பு இவருக்கு.

ஒரு வழியாக இருவரும் டிரஸ் அணிந்து தயாரானோம். இவர் கொடை, பையுடன் காசி யாத்திரைக்கு  செருப்பு அணிந்து கிளம்ப , செருப்பின் உள் பகுதியில் ஏதோ துருத்திக் கொண்டு இருக்க காலை கீறி லேசாக தோல் உரிந்தது. ஒரு பக்கம்  எரிச்சல் காலில்.

என் அப்பா இரண்டு மணி நேரம் கூட தூங்கவில்லை. பெண் கல்யாண எண்ணம் பலத்தை கொடுத்தது போலும்.

 வாசலில் போன மாப்பிள்ளையிடம் காசி போக வேண்டாம் என் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்லி உள்ளே அழைத்து வர,  எதிர் கொண்டு என்னையும் அழைத்து சென்றனர்.

மாலை மாற்றிக் கொள்ள, ஊஞ்சலில் அமர்ந்து பாலும் பழமும் வந்திருந்த முக்கால் வாசி பெண்கள் மாத்தி மாத்தி கொடுக்க ஒரு கட்டத்தில் வாழைப்பழம் குமட்டிண்டு வந்தது.

ஒரு வழியாக மேடை அமர்ந்து மேலும் சில சடங்குகள். முகூர்த்த புடவையை எடுத்து கொடுத்து பத்து நிமிடத்தில் உடுத்தி வருமாறு சாஸ்திரிகள் கட்டளையிட தரதரவென என்னை ரூமுக்கு இழுத்து சென்று ஒன்பது கஜம் மடிசார் கட்டிவிட ஒரு வயதான பாட்டி உதவிக்கு.

சிலை மாதிரி நான் நிற்க சுத்தி சுத்தி புடவையை கட்ட ஆரம்பித்தனர்.

   மேல் தலப்பு நீளம் குறைய மறுபடியும் முதலிலிருந்து கட்ட ஆரம்பித்தனர். இதற்குள் சாஸ்திரிகள் முகூர்த்த நேரம் தாண்டிடப் போறது என்று ஒரு குரல் கொடுக்க ஒரு வழியாக கால் தடுக்காத குறையா அடிப் பிரதட்சணம்  செய்வது போல் நடந்து வந்து  என் தந்தையின் மடியில் அமர்ந்தேன்.

என் கனம் தாங்காமல் என் அப்பா இந்த பக்கம் அந்த பக்கம் என்று என்னை நகர்த்தி கொண்டிருந்தார். தாலி கையில் எடுத்து என் கணவரிடம் சாஸ்திரிகள் கொடுக்க ,கெட்டி மேளம் முழங்க தாலி என் கழுத்தில் ஏறியது.  மகிழ்ச்சியாக தலை நிமிர்ந்து இவரை பார்த்தேன். சுற்று முற்றும் பார்க்க, என் அண்ணன் அண்ணி மார்கள் பெற்றோர் கண்கள் கலங்கிய  நிலையில்.

அவர்களை விட்டு நான் பிரியப் போகிறேன் என்ற எண்ணம் . அவர்கள் என் மீது கொண்ட அன்பை நினைத்து என் கண்களிலும் இரண்டு சொட்டு நீர்.

வந்திருந்த விருந்தினர் சாப்பாட்டுக்கு பின்  வீடு செல்ல, எங்கள் இருவருக்கும்  விருந்து சாப்பாடு. டேபிளில் கோலம் போட்டு தலைவாழை இலையில் அனைத்தும் பரிமாற சாப்பிட உட்கார்ந்தோம். இனிப்பை எடுத்து எனக்கு ஊட்டி விட  உறவினர் சொல்ல  ஒரு முழு லட்டை என் வாயில் அடைத்தார் என் கணவர். பதிலுக்கு நானும் அவருக்கு ஊட்டிவிட கூடியிருந்த அனைவர் மனதிலும் மகிழ்ச்சி.

நான்கு மணிக்கு அடுத்த நலங்கு என்ற சடங்கு. அதில் தேங்காயை உருட்டி விளையாட ஒருவருக்கொருவர் கேலி செய்த வண்ணம்   நடந்தது. பல வருடங்களுக்கு முன் ஓரளவுக்கு சிறிய வயதில் திருமணம். பழகுவதற்காக  நடந்தவை.   இப்பொழுது  அர்த்தமற்றதாக தோன்றினாலும் தாத்தா பாட்டி ஆசைக்கு ஈடு கொடுக்க வேண்டி இருந்தது.

6.30 மணிக்கு ரிசப்ஷன். இந்துமதி வந்து எனக்கு மேக்கப் போட்டு அலங்கரிக்க இவரும் கோட் சூட் என்று அணிந்து  ரிசப்ஷன் சோஃபாவில் அமர்ந்தோம். சாரை சாரையாக விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர். சிறிது நேரம் கூட உட்கார முடியாமல் கையில் உள்ள பூச் செண்டையும் கீழே வைக்காமல் கால் கடுக்க நின்றோம். மண்டபத்தில் எள்ளளவும் இடமில்லாமல் கூட்டம். இன்றைய மா பெரும் கர்நாடக இசை கலைஞர் திரு விஜய் சிவா அவர்களின் கச்சேரி. கேட்கவே வேண்டாம். சாப்பிட்டு முடித்தவர்களும்  உட்கார்ந்து விட்டனர்.

 இது ஒரு பக்கம் இருக்க டைனிங் ஹாலில் கூட்டம் அலை மோதியது.

ஒரு பந்தி முடிவதற்குள்  சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்கு ரசம் பரிமாறும் போதே பின்னே போய்  அடுத்த பந்திக்கு காத்திருந்தவர்கள் நிற்க ஆரம்பிக்க திக்கு முக்காடி போயிற்று.

சமயோசிதமாக  ஒரு நண்பர் பந்தி ஆரம்பித்தவுடன் கதவை மூட , கதவின் வாசலில் நின்று   கூட்டம் உள்ளே போய் நிற்காமல் பார்த்து கொண்டார்.

ஒருவழியாக 10 மணி அளவில் வந்த விருந்தாளிகள் அனைவரும் திரும்பி சென்றிருக்க எஞ்சி இருந்த உறவினர் ஹாலிலேயே ஜமக்காளத்தில் உறங்க ஆரம்பித்தனர்.

 டின்னர் சாப்பிட நாங்கள் உட்கார்ந்தோம். இரண்டு வாய் கூட சாப்பிட முடியவில்லை. மிக்க அசதி.

என் பெற்றோருக்கு தன் மகளின் திருமணத்தை ஒரு சடங்குகளும் குறையாமல் நடத்திய திருப்தி.

மறு நாள் மேலும் ஒரு சிறிய சடங்கு. ஆண் பெண் இருபாலரும் கும்மி அடித்து ஆடி பாட   சமையல்காரர் குடுத்த  கட்டு சாத கூடையுடன் மண்டபத்தை காலி செய்தோம்.

 என் குடும்பம் புடை சூழ என் கணவர் வீட்டில் காலடி எடுத்து வைத்தேன்.

 அனைவரின் நெஞ்சு நிறைந்திருந்தது.

 என் பெற்றோரின் பாதிக்கு மேற்பட்ட சேமிப்பு செலவழிந்தாலும் அவர்களின் மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. எங்கள் திருமணத்திற்கு உற்றார் உறவினர் அனைவரும்  நான்  நீ  என்று போட்டி போட்டு உதவிக்கு வந்ததை நினைக்கும் போது இன்றும் நன்றி உணர்வு  மேல் எழும்புகிறது.

நல்ல கணவர் குடும்பம் குழந்தைகள் என்று இன்று வரை மகிழ்ச்சியான வாழ்க்கை.  இதை எழுதி முடிக்கும் போது மீண்டும் கடவுளுக்கு நன்றி கூறினேன்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *