• July 9, 2025
  • NewsEditor
  • 0

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் கேன்டீன் சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஊழியரை முகத்தில் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி இருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அங்குள்ள கேன்டீனில் தனக்கும், தன்னுடன் இருந்தவர்களுக்கும் சாப்பாடு ஆர்டர் செய்தார். கேன்டீன் ஊழியர் எம்.எல்.ஏ.தங்கி இருந்த அறைக்கு சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்தார். சாப்பாட்டோடு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட பருப்பு குழம்பில் லேசான கெட்டுபோன வாசனை வந்ததாக தெரிகிறது.

அதனை அவருடன் இருந்த சிலர் சாப்பிட்டு பார்த்தனர். அவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டது. உடனே சட்டை கூட போடாமல் பனியனோடு எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் கேன்டீனுக்கு சென்றார்.

தன்னுடன் பருப்பு குழம்பையும் எடுத்து சென்று இருந்தார். அங்கு சென்று யார் இந்த குழம்பை தயார் செய்தது என்றும், அவரை கூப்பிடுங்கள் என்று எம்.எல்.ஏ. சத்தம் போட்டார். யார் எனக்கு இதை கொடுத்தது என்றும், எம்.எல்.ஏவுக்கு இதை கொடுப்பீர்கள் என்றால் மற்றவர்களுக்கு எதைக்கொடுப்பீர்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார். இதை சாப்பிட்டால் இறக்க நேரிடும் என்று எம்.எல்.ஏ.வுடன் இருந்த நபர் குறிப்பிட்டார்.

அதோடு கேன்டீன் வரவேற்பாளரிடம் சொல்லி கேன்டீன் உரிமையாளரை போன் செய்து வரவைக்கும்படி கேட்டுக்கொண்டார். கேன்டீன் ஊழியர்களிடமும் கேன்டீன் உரிமையாளரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். உடனே கேன்டீன் ஆப்ரேட்டர் அவசர அவசரமாக அங்கு வந்தார். கேன்டீன் உரிமையாளர் வந்தவுடன் அவரிடம் பருப்பு குழம்பை கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி கூறினார்.

கேன்டீன் உரிமையாளர் பருப்பு குழம்பை நுகர்ந்து பார்த்தபோது எம்.எல்.ஏ. அவரது முகத்தில் ஓங்கிக்குத்தினார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக சில குத்துக்களை குத்தினார். அதோடு எம்.எல்.ஏ. ஓங்கி அடித்ததால் கேன்டீன் உரிமையாளர் கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து எல்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில், ”பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது. நான் சப்பாத்தி, சோறு, பருப்பு குழம்பு ஆர்டர் செய்திருந்தேன். அதனை சாப்பிட்டவுடன் எனக்கு தலைசுற்றல் போன்ற உணர்வு ஏற்பட்டது. நானும் உடனே கேன்டீன் சென்று அங்கிருந்த மேலாளரிடம் பருப்பு குழம்பை கொடுத்து நுகர்ந்து பார்க்கும்படி கூறினேன். அவரும் பார்த்துவிட்டு இதனை சாப்பிட முடியாது என்று கூறினார். பல ஆண்டுகளாக கேன்டீன் ஊழியர்களிடம் புதிய உணவை கொடுக்கும்படி கூறி வருகிறேன். அவர்களிடம் இருக்கும் சிக்கன் கறி, முட்டை மிகவும் பழைய கையிருப்பு ஆகும். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர். மக்கள் புகார் செய்தாலும் அதனை கேட்பதில்லை”என்றார்.

`எம்.எல்.ஏ.வாக இருக்கும் நீங்கள் இது போன்று நடந்து கொள்ளலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ”நான் எம்.எல்.ஏ. அதோடு போராளியும் கூட. எப்போது நாம் சொல்லும் ஒன்றை பல முறைகூறியும் புரிந்து கொள்ளவில்லையோ அப்போது பால் தாக்கரே எங்களுக்கு கற்றுக்கொடுத்ததை செய்கிறோம்”என்றார்.

பால் தாக்கரே

“மேலும் நான் ஜூடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம் போன்றவற்றில் சாம்பியன். நான் ஒன்றும் காந்தி கிடையாது. நான் செய்த காரியத்திற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது. இது சிவசேனா ஸ்டைல். நான் தவறு செய்ததாக நினைக்கவே இல்லை. இப்பிரச்னையை சட்டமன்றத்திலும் எழுப்புவேன்” என்றும் சஞ்சய் கெய்க்வாட் மேலும் குறிப்பிட்டார்.

புல்தானா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி இது போன்ற சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும். சமீபத்தில் சத்ரபதி சாம்பாஜி மகாராஜிக்கு 16 மொழிகள் தெரியும் என்றும், அவர் என்ன முட்டாளா? என்று கேட்டு சர்ச்சையை கிளப்பினார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *