• July 9, 2025
  • NewsEditor
  • 0

பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட்‌டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் ரூ.77 லட்சம் மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்ற 32 வயதான இவர், நடிகையின் தயாரிப்பு நிறுவனமான Eternal Sunshine Productions Pvt. Ltd மற்றும் அவரது தனிப்பட்ட நிதிக் கணக்குகளில் இந்த மோசடியை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

2022 முதல் 2024 வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

இந்த மோசடி 2022 மே மாதத்திலிருந்து 2024 ஆகஸ்ட் மாதம் வரை நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அலியா பட்‌டின் தாயும், இயக்குநருமான சோனி ரஸ்தான், கடந்த ஜனவரி 23ஆம் தேதி மும்பை ஜுஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலி பில்கள், கணக்குகள் மூலம் பணம் திருட்டு

விசாரணையில், வேதிகா ஷெட்டி, அலியா பட்‌டின் பயண செலவுகள், வேலை தொடர்பான மீட்டிங் என்ற பெயரில் போலி பில்களைத் தயாரித்து, நடிகையின் கையொப்பத்தைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த தொகை வேதிகா ஷெட்டியின் நண்பரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டு பின்னர் அவருக்குத் திருப்பித் தரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் கைது

இதற்கிடையில் புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு வேதிகா ஷெட்டி தலைமறைவாகி, தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்திருக்கிறார். ராஜஸ்தானுக்கும், பின்னர் கர்நாடகாவிற்கும், பின்னர் புனேவிற்கும், பின்னர் பெங்களூருவிற்கும் சென்றிருக்கிறார் வேதிகா. இறுதியில் பெங்களூருவில் ஒளிந்திருந்த வேதிகா ஷெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர், டிரான்சிட் ரிமாண்ட் பெற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த மோசடிக்குற்றம் தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *