
AI கோலோச்சும் உலகில் இன்டர்நெட் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்ற சூழலை மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை எக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஸ்னாப் எனப் பிறருடன் சாட் செய்வதற்கு இன்டர்நெட் தேவைப்படுகிறது. இன்டர்நெட் இல்லாத சூழலில், டவர் கிடைக்காத சூழலில் அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற சூழல்களில் பிறருக்குத் தகவல் தெரிவிக்க முடியாத சிக்கல் ஏற்படும்.
இதைச் சரிசெய்யும் விதமாக இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் ‘பிட்சாட்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தச் செயலி புளூடூத் மெஷ் நெட்வொர்க்குகளில் இயங்குகிறது.
இது பயனர்களின் மொபைல் டேட்டா, சிம் கார்டுகள், வைஃபை நெட்வொர்க்குகள் என எதையும் பயன்படுத்தாமல் ரகசிய உரையாடல்களுக்குப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்த பதிவு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை.
தனியுரிமை என்ற அடிப்படையில் எந்தப் பயனர்பெயர்களின் பெயரையும் பதிவு செய்யத் தேவையில்லை. இந்தச் செயலியைத் தற்காலிக செய்திகளை அனுப்புவதில் தொடங்கி குழு அரட்டையோடு, உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் உரையாற்றவும் பயன்படுத்த முடியும்.
ஏற்கெனவே ஆஃப்லைன் புரோட்டோகால் மூலம் ஃபெர்ன்வே (fernweh.chat) போன்ற பிற தளங்கள் மெஷ் அடிப்படையிலான செய்தியிடல்களை வழங்கிவரும் நிலையில், பிட்சாட் செயலி போட்டி நிறைந்த பகுதியில் நுழைந்திருக்கிறது.
டிஜிட்டல் உலகில் பல்வேறு மோசடிகளும் தவறான செயல்பாடுகளும் அதிகரித்துவரும் நிலையில், ஆஃப்லைனில் செயல்படும் பிட்சாட் செயலியானது தனியுரிமையை மீறாமல் பயனரை இணைப்பில் வைத்திருப்போம் என உறுதியளிக்கிறது.