
சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.