
டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.
அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.
மறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுத்தாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கொதித்தனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் பாஜக அரசுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்தது.
பின்னர், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, உடனடியாக இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், வாகனம் வெளியேற்றும் காற்று மாசின் அடிப்படையில் அத்தகைய வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினர்.
அதன் பின்னர், ஜூலை 3 தேதி முதல் எந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அரசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திருப்பிக்கொடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது.
இத்தகைய சூழலில், டெல்லியின் மாசு சாதாரண மக்களின் ஆயுட்காலத்தைக் குறைப்பதாகவும், தான் டெல்லிக்கு வந்தால் இரண்டு மூன்று நாள்கள்தான் தங்குவேன் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “டெல்லியில் இரண்டு மூன்று மட்டுமே நான் தங்குவேன். டெல்லிக்கு சென்றதும் எப்போது அங்கிருந்து புறப்படுவேன் என்றுதான் யோசிப்பேன்.
டெல்லியில் மாசுபாடு சாதாரண மக்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கிறது. இதைத் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எத்தனால் போன்ற மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், மரக்கன்று நடும் செயல்களைப் பெரிய அளவில் மேற்கொள்வதும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள தீர்வுகள்.” என்று கூறினார்.