
“இனி சின்ராச கையிலேயே புடிக்க முடியாதுங்க…” என்று சொல்லும் அளவுக்கு தேர்தல் வந்துவிட்டால் தூங்கி வழிந்த அரசியல்வாதியிலிருந்து ஆக்ரோஷமாக அறிக்கைவிட்டுக்கொண்டிருந்த அரசியல்வாதிவரை எல்லோருக்கும் சுறுசுறுப்பு பலமடங்கு கூடிவிடும்.
எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சிகளின் தவறுகளை கண்டித்து பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடுவார்கள். மைக்கை நீட்டுபவர்களிடமெல்லாம் நரம்பு புடைக்க விமர்சனங்களை முன்வைப்பார்கள்.
ஆளும் கட்சியாக இருந்தால், எதிர்க்கட்சிகள் மீது அந்த வழக்கு இருக்கிறது, இந்த வழக்கு இருக்கிறது என எல்லாவற்றையும் தூசிதட்வார்கள். புதிய திட்டங்களை அறிவித்து வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தேர்தலுக்கான வாக்காளர்களை அறுவடை செய்ய தீவிரம் காட்டுவார்கள்.
மொத்தத்தில் திடீரென அனைத்துக் கட்சிகாரர்களுக்கும் ‘எம்மதமும் சம்மதம்’ முதல் ‘சாதி என்னடே சாதி… அதுகிடக்கு’ என போட்டோ ஷூட் நடத்தும் அளவுக்கு பிசியாகிவிடுவார்கள். கூட்டி கழித்துப்பார்த்தால் இன்னும் 9 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்.
அதற்குள் எல்லாக்கட்சியும் நல்லதை மட்டுமே சிந்திக்கும், செயல்படுத்தும், உரிமைக்கு குரல் கொடுக்கும், அநியாயத்தைக் கண்டால் பொங்கும் சைவப்புலிகளாக மாறிவிடும் அதிசயங்களெல்லாம் நடக்கும்.
இந்தக் களேபரங்களுக்குள்தான் இந்திய நாடாளுமன்றம் முதல் சட்டமன்றத் தேர்தல்வரை எல்லாக் கட்சிகளும் முன்னெடுக்கும் ஒரு மாபெரும் பிரசார யுக்தி இருக்கிறது. அதுதான், மக்களை நேரடியாக சந்திக்கும் ‘சுற்றுப்பயணம்’.
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுத தீவிரமாக செயலாற்றிய தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா முதல் தற்போது கட்சி ஆரம்பித்து முதல்வராகத்துடிக்கும் தா.வெ.க தலைவர் விஜய் வரை அனைவருக்கும் மக்களைச் சந்திக்கும் ‘சுற்றுப்பயணம்’ மீது பெரும் நம்பிக்கை இருந்திருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் இப்போது தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தில் ‘இரட்டை இலை துளிர்விட்டு, தாமரை மலருமா? மலராதா?’ என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இதுப்போன்றச் சுற்றுப்பயணங்கள் தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது தொடர்பாக இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே கர்ம வீரர் காமராசர் மக்களை நேரில் சென்று சந்திக்கும் வழக்கத்தையும், மக்களின் தேவைகள், பிரச்னைகள் குறித்து அலசி ஆராயும் ஆற்றலையும் பெற்றிருந்தார். அவரின் தொடர் மக்கள் சந்திப்புத்தான் 1954-ம் ஆண்டு மெட்ராஸின் முதல்வராகக் காரணமாக அமைந்தது.
இந்திய சுதந்திரத்துக்கு தூணாக இருந்த கட்சிகளில் காங்கிரஸுக்கு முக்கிய இடமுண்டு. அந்த தாக்கத்தால் சுதந்திரத்துக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் தொடந்து ஆட்சி கட்டிலில் இருந்தது காங்கிரஸ்.
காமராசரின் சுற்றுப்பயணங்கள், அப்போது தீவிரமாக செயலாற்றிக்கொண்டிருந்த தந்தைப் பெரியாரின் சுற்றுப்பயணங்கள் மூலம் பெரும் பாடம் கற்றிருந்தார் அறிஞர் அண்ணா. அதை அப்படியே தன் அரசியல் வாழ்க்கையில் செயல்படுத்தவும் செய்தார்.
அதன் தாக்கத்தால், 1967-ல் தமிழ்நாட்டின் அரசியலில் வீசிய பெரும் புயலில் கரைந்து காணாமல் போனது காங்கிரஸ். அப்போது சாய்ந்த தமிழக காங்கிரஸ் எனும் ஆலமரம் இப்போதுவரை பெரிதாக எந்த அசைவுமில்லாமல் இருக்கிறது.
இது எப்படி சாத்தியமானது என்றக் கேள்விக்கு, வெற்றிலைப்பாக்கின் சிவந்த நாவுடன் இருந்த அறிஞர் அண்ணாதான் பதில். 1949-ம் ஆண்டு அண்ணா தொடங்கிய தி.மு.க எனும் தனிக்கட்சி, 1957-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அண்ணா, கருணாநிதி என தி.மு.க-வின் பெருந்தலைவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் முதல் முதலாக அடியெடுத்து வைத்திருந்தனர்.
1962-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காமராசரின் திட்டப்படி முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 14 பேர் தோல்வியைச் சந்தித்தனர். இதில் முதன்மையானவர் அண்ணா. ஆனால், 50 தி.மு.க எம்.எல்.ஏ-கள் வெற்றிப்பெற்று சட்டமன்றத்துக்குச் சென்றனர். அவர்களில் ஒருவர் கலைஞர்.

அதன் பிறகு, தி.மு.க எம்.எல்.ஏ ‘தம்பி’-களின் வற்புறுத்தலால் எம்.பி.யான அண்ணா, கர்ஜனைக்காக பாராளுமன்றம் நோக்கி நடந்தார்.
1967- ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சித் தலைவன் என்ற பொறுப்புடன், தமிழ்நாட்டின் பட்டித் தொட்டியெங்கும் பயணம் மேற்கொண்டார். அண்ணாவின் கரகரக் குரலுக்கும், வாய் ஜாலத்துக்கும் மயங்காதவர்கள் உண்டா?. அவரின் கொள்கை முடிவுகள், தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் தீயாய்ப் பரவி, ஒவ்வொரு குடிசையின் கீழ் இருந்த நெஞ்சுக்குள் தஞ்சம் புகுந்தது.
அப்போது அவர் செய்த அந்த சுற்றுப்பயணமும், தேர்தல் பிரசாரமும் அண்ணாவே எதிர்பார்க்காத வெற்றியைக் கொடுத்தது. அப்போது எழுந்த தி.மு.க எனும் சாம்ராஜ்யம் இப்போதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்திருக்கிறது.
1969-ம் ஆண்டு அறிஞர் அண்ணா மறைந்தபோது, அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. முரசொலிமாறன், கருணாநிதி உள்ளிட்டவர்கள் மூத்த தலைவர் நாவலரை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், எம்.ஜி.ஆர் கலைஞர் கருணாநிதிதான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என கருணாநிதி வீட்டுக்கேச் சென்று அனைவரையும் சம்மதிக்க வைத்தார். இப்படித்தான் முதன்முதலில் முதல்வரானார் கருணாநிதி.
1971-ம் ஆண்டு அறிஞர் அண்ணா இல்லாமல் தி.மு.க சந்தித்த சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து எம்.ஜி.ஆரும், வடபகுதியான செங்கல்பட்டில் இருந்து கலைஞர் கருணாநிதியும் பிரசாரம் தொடங்கினர். இரண்டு தலைவர்களுக்குக் கிடைத்த ஆதரவு, ஓட்டுக்களாக மாறி, தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தது.
கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். இப்படி தி.மு.க-வுக்காக அயராது உழைத்து நெருக்கமான நட்பு 1972-ம் ஆண்டு முறிந்தது. இதற்குப் பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், எம்.ஜி.ஆர் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விரும்பியதாகவும், அமைச்சர் ஆக வேண்டுமானால் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கருணாநிதி சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆருக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் விரிசல் தொடங்கியது. அதற்குப் பிறகே, கலைஞர் கருணாநிதியிடம் கணக்குக்கேட்ட விவகாரங்கள் தொடங்கி எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு தனிக்கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கும் நிலைக்குச் சென்றார்.
1973-ம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதனால் அந்தத் தொகுதிக்கு 1973 மே 20-ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தன் ஆளுமையை நிரூபிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். அ.தி.மு.க காணும் முதல் தேர்தல் இது தான். அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். தி.மு.க-வும் தன் வேட்பாளரை நிறுத்தியது.
அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இறுதியில் அ.தி.மு.க-வே அந்தத் தேர்தலில் வென்றது!
இதன்பிறகு இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி காலத்தில், தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்டு கட்சி, ஃபார்வார்டு பிளாக், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க போட்டியிட்டது.
ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கே சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்.ஜி.ஆர், சட்டமன்றத் தேர்தலுக்கு சொல்லவா வேண்டும். மாநிலம் முழுவதும் தொடர் பயணங்களை மேற்கொண்டு, பிரசாரம் செய்து மக்களிடம் இருக்கும் தன் மீதான நம்பிக்கையை வலுப்படுத்திக்கொண்டார். அதன் பலனாக அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது.
திரைத்துறையின் பிரபலமான முகம் என்பதைத் தாண்டி, அவருக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்கவும், மக்களின் ஆதரவை உறுதியாக்கவும் அ.தி.மு.க எனும் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அவரின் சுற்றுப்பயணங்கள் பெரிதும் உதவியது. அதன் தாக்கத்தாந்தான் இன்றுவரை கிராமங்கள் தோறும் எம்.ஜி.ஆர் கட்சி என அவருக்கான ரசிகர்களை தக்கவைத்திருக்கிறார்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் டிசம்பர் 24, 1987-ல் மரணமடைந்தார். அவருக்கு பின் யார் தலைமை தாங்குவது என்ற கோஷ்டிச் சண்டை நடந்தது. ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி தலைவராகவும் முதல்வராகவம் ஆனார்.
இதை ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்டமன்ற உறுப்பினர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். சட்டமன்ற பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.
எனவே, ஜனவரி 26, 1988-ல் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜெயலலிதா கோஷ்டியும், ஜானகி கோஷ்டியும் மோதிக் கொண்டனர். 97 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜானகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பில் மோசடி நடந்ததாகக் கூறிய மத்திய அரசு, ஜானகி ஆட்சியைக் கலைத்தது.
அதைத் தொடர்ந்து ஜனவரி 21, 1989-ல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க. இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு இரட்டைச் சுமை இருந்தது. ஒன்று எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நான் தான் என நிரூபிக்க வேண்டும். போட்டியிட்ட இடங்களில் வென்றாக வேண்டும். இந்த இரண்டையும் தன் தீவிரப் பிரசாரத்தால் வென்றெடுத்தார் ஜெயலலிதா.
இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றினாலும், ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றிபெற்றது. ஜானகி அணி வெறும் இரண்டு இடங்களையே கைப்பற்றியது. ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகி தோற்றுவிட, போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றிபெற்றார்.
மக்களிடம் நேரடியாகப் பேச ஜெயலலிதா மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள்தான் அவர் ஆதரவு தொண்டர்களை ஒருங்கிணைக்க உதவியது. இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் அதிமுக-வை ஒன்றாக்கி, இரட்டை இலைச் சின்னத்தை மீட்ட ஜெயலலிதா, தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்றார்.
இந்த சூழலில்தான் ஜெயலலிதா சட்டமன்றத்தில் மானபங்கப்படுத்தப்பட்டதாக சபையிலிருந்து வெளிநடப்புச் செய்து, இனி இந்த அவையில் முதல்வராகத்தான் நுழைவேன் என சபதம் செய்திருந்தார்.
ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிட, அடுத்து நடந்த 1991-ம் வருட சட்டமன்றத் தேர்தல் ஜெயலலிதாவின் பலத்தை நிரூபிக்கவும், அவரின் சபதத்தை நிறைவேற்றவும் காலம் அவருக்கு அவகாசமளித்திருந்தது.

அதை, ராஜிவ் காந்தியை இழந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தன் தீவிரப் பிரசாரத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். அப்போது தொடங்கிய அவரின் அரசியல் பயணம், 2016-ல் அவர் மரணமடையும் வரை தமிழ்நாட்டின் அசைக்கமுடியாத ஆளுமையாக தொடர்ந்தது.
2016-ல் ஜெயலலிதா மரணமடைந்தப் பிறகு மீண்டும் யாருக்கு அதிகாரம் என்றக் கோஷ்டிப் பூசல் எழுந்தது. சசிகலா Vs ஓபிஎஸ் என மாறி அது இறுதியில் ஓபிஎஸ் Vs இபிஎஸ் Vs சசிகலா என மாறியது.
சசிகலா சிறைக்குச் சென்றப்பிறகு, தர்மயுத்தம் செய்த பன்னீர் செல்வத்துடன் கரம் கோர்த்தார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொண்டார்.
2021 தேர்தல் ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க vs கலைஞர் இல்லாத தி.மு.க என களம் தீயாக இருந்தது. முதல்வர் வேட்பாளாராக தன்னை மக்கள் முன்பு முன்னிறுத்த வேண்டிய அவசியம், தொண்டர்களிடம் தனக்கான செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம், என்பதுடன் இன்னொரு சுமையாக பா.ஜ.க கூட்டணி என மும்முனைச் சவாலுடன் தேர்தலை எதிர்க்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அதற்காக கடுமையான பிரசாரங்களையும், தொடர் பயணங்களையும் முன்நகர்த்தினார். ஆனால் அந்தத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும், 65 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிப்பெற்றது.
இந்த நிலையில்தான் 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கூறியது போல எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்றச் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
தி.மு.க-வும் ‘ஓரணியில் இணைவோம்’ எனத் தன் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது. அதேப்போல தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து எதிர்வரும் மாதங்களில் மீதமிருக்கும் அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணத்தை தீர்மானித்து அறிவிக்கும். இந்த அரசியல் களத்தில் எந்தக் கட்சியின் சுற்றுப்பயணம் பலனளிக்கிறது, யாருக்கு வரலாறாக மாறப்போகிறது, யாருக்கு செல்வாக்கை அதிகரிக்கப்போகிறது என்பதை தேர்தல் முடிவுகள் அறிவிக்கும். அதுவரை பொருத்திருப்போம்.