
மதுரையில் நடந்த மதுரை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க இணையற்ற சேவைகளை செய்த மதிமுக, முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற உண்ணாவிரதம், மறியல் போராட்டம் என நடத்தினோம்.
போராட்டம் நடத்தி, வழக்கு தொடுத்து நானே வாதாடியதால்தான் சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்ப்பளித்தது. எங்கள் இயக்கம் தொடங்கி 31 வருடங்களாகிவிட்டது தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம்.
திமுகவிற்கு பக்க பலமாக, அரவணைத்து செல்லவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இருக்கிறோம். திமுகவிற்கு சோதனையான காலத்தில் அரணாக மதிமுக உடன் இருக்கும்.
மதுவை ஒழிக்க வேண்டும் என வாய் மட்டும் பேசாமல், டாஸ்மாக் கடைகளை சூறையாடி, நெருப்பு வைத்தார்கள் எனது தோழர்கள்.
2026 தேர்தலில் திராவிட இயக்கத்தை காக்க திமுகவுடன் உடன்பாடு கொள்கிறோம். எட்டு இடங்களில் வெற்றி பெற்றால்தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் கூடுதலாக இடங்கள் கேட்போம்.

திராவிட கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வரும் அதிமுகவை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
மனிதர்களால் இயக்கப்படும் ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு, மின்மயமாக மாற்றி விபத்துக்களை தடுக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சரத்திற்கும் உள்ளது. இரண்டு பச்சிளம் உயிர்கள் பறிபோன கடலூர் ரயில் விபத்து வேதனை அளிக்கிறது” என்றார்.