
புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதில் வங்கிகள், இன்சூரன்ஸ், அஞ்சல் நிலையங்கள், நிலக்கரி சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.