
பாட்டி யானை என்றழைக்கப்படும் மூத்த பெண் யானைகள் மூலமே ஒவ்வொரு யானை குடும்பமும் வழிநடத்தப்படுவதுடன், மத யானைகள் நீங்கலாக குட்டிகளுடன் மொத்த குடும்பத்தையும் பாட்டி யானைகளே வலசை அழைத்துச் சென்று பாதுகாப்பு அளிப்பதை ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. பச்சிளம் குட்டிகள் மீது தாய் யானை மட்டுமின்றி மொத்த குடும்பமும் அதீத பாசத்துடனும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை உணர்வுடன் கவனித்து வருவதையும் காண முடியும்.
ஆனால், அதையும் மீறி சில சமயங்களில் குட்டிகள் தாயையும், தம் குடும்பத்தையும் விட்டுப் பிரியும் துயரம் நேர்கிறது. வேதனையான இந்த சூழலில் களமிறங்கும் வனத்துறை, எப்படியாவது குட்டிகளை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியைப் போராடி மேற்கொள்கின்றனர். மிகவும் சவாலான அந்தப் பணி சில நேரங்களில் வெற்றியடைகிறது. பல நேரங்களில் தோல்வியடைந்து முகாம் யானைகளாக மாறும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய பூங்காக்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவில் தாயைப் பிரிந்து சாலையில் பரிதவித்துக் கொண்டிருந்த பச்சிளம் யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்க்க வனத்துறை மேற்கொண்ட ஸ்மார்ட் வொர்க் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவில் தாயைப் பிரிந்து சாலையில் பரிதவித்து வந்த யானை குட்டியை மீட்ட வனத்துறையினர், அதன் குடும்பம் நடமாடும் பகுதியைக் கண்டறிந்துள்ளனர். அந்த கூட்டத்தில் பாலூட்டும் பருவத்தில் தாய் யானைகள் சில இருந்தாலும் குட்டியில்லாமல் தவித்த குறிப்பிட்ட அந்த யானையை குறிப்பிட்ட சில அறிகுறிகள் மூலம் கண்டறிந்து நெருக்கமாக கண்காணித்து வந்துள்ளனர்.

குட்டியின் தாய் யானை எது என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்த வனத்துறையினர், மனித வாடையைப் போக்கும் விதமாக அந்த தாய் யானையின் சாணத்தை குட்டியின் மீது பூசி காட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். மாயம் நிகழ்ந்தைப்போல் அடுத்த சில நிமிடங்களில் தாய் யானை வந்து குட்டியை அழைத்துச் சென்றிருக்கிறது. தாயையும் அதன் காட்டையும் மீண்டும் ஒப்படைத்த வனத்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.