
ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.
போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்த அந்தப் பெண், தாங்கள் இருவரும் 5 வருடம் ரிலேஷன்ப்பில் இருந்ததாகவும், குடும்பத்தினரிடம் மருமகள் அறிமுகம் செய்து வைத்ததால் அவரை முழுமையாக நம்பியதாகப் புகாரில் குறிப்பிட்டு, திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கான ஆதாரங்களாக தங்கள் இருவரின் மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள், வீடியோ கால் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின்படி பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், யஷ் தயாள் கணவர் போல நடந்துகொண்டதால் அப்பெண் அவரை முழுமையாக நம்பியதாக, பின்னர் அப்பெண்ணை அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டியதாகவும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இருப்பினும், யஷ் தயாளோ அல்லது அவரது குடும்பத்தினரோ யாரும் இந்த விவகாரத்தில் ஒரு அறிக்கைகூட விடவில்லை.
இந்த நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் யஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபர் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.