
`தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரடியூசர்ஸ் அசோசியேசன்’ எனப்படும் இயக்குநர் பாரதிராஜாவைத் தலைவராகக் கொண்ட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புதிதாக சேர்க்கிற உறூப்பினர்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் ஜூன் மாதம் சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டு, அவரக்ளை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி ஜூனில் மொத்தம் ஆறு பேர் தங்களது நிறுவனங்களை சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்களாம்.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், கே.வெங்கடசுப்பா ரெட்டி, ஆர்.ராஜராஜன், எஸ்.சிவசங்கர் ஆகிய பெயர்கள் கொண்ட அந்தப்பட்டியலில் தான் கடைசியாக ஜாபர் சாதிக் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.
திமுகவில் பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக் ஏற்கெனவே திரைத் துறையினருடன் நெருக்கமாகவே இருந்து வந்தாலும் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பது சினிமாவிலேயே ஒரு சலசலப்பை உண்டாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘ஜாபர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்பட்சத்தில் அவரை உறுப்பினராகச் சேர்த்தது சரியான நடவடிக்கை இல்லை’ என்று குறிப்பிடும் சிலர் இந்த விஷயத்தில் சங்கம் அவசரப்பட்டு விட்டதாகவே தெரிகிறது; கொஞ்ச காலம் பொறுமையாக இருந்திருக்கலாம்’ என்கின்றனர்.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவிடம் பேசினோம்.

”ஜாபர் சாதிக் தன்னுடைய நிறுவனத்தை எங்க சங்கத்துல பதிவு செய்து உறுப்பினராகியிருப்பது நிஜம்தான். ஒரு படம் தயாரிச்சா அதுக்கு சென்சார் சர்டிபிகேட் வாங்கறதுக்கு தயாரிப்பாளர் சங்கக் கடிதம் அவசியம். அவர் இப்ப ஒரு படத்தை எடுத்து முடிச்சிருக்கார். அந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட்டுக்காகத்தான் சங்கத்துல பதிவு செய்திருக்கார். தவிர, அவர் தற்காலிக உறூப்பினராகத்தான் பதிவு செய்திருக்கோம். தற்காலிக உறுப்பினர்களுக்கு ஓட்டு போடுவது போன்ற உரிமையெல்லாம் கிடையாது. படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள் சங்கத்துல சேர்வது வழக்கமான நடைமுறைதான்’ என்கிறார் இவர்.