• July 8, 2025
  • NewsEditor
  • 0

வேலூரில், `கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட அரசு பென்ட்லேண்ட் பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை’ எனக் குற்றம்சாட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையிலும், அ.தி.மு.க-வினர் இன்று காலை ஆர்ப்பாட்ட பகுதிக்குச் செல்ல முயன்றனர்.

முன்கூட்டியே குவிக்கப்பட்ட காவல்துறையினர்…

ஆனால், முன்கூட்டியே பேரிகார்டுகளை தடுப்புகளாக அமைத்து எஸ்.பி மதிவாணன் தலைமையிலான காவல்துறையினர் குவிந்திருந்தனர். அ.தி.மு.க கரைவேட்டி கட்டிக்கொண்டு சாலையின் இருபுறமும் வந்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மடக்கிப் பிடித்து தயாராக நிறுத்தப்பட்டிருந்த வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

கைது நடவடிக்கையைத் தெரிந்தும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அமைப்புச் செயலாளர் வி.ராமு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், “எந்த வேலையும் நடைபெறாமல் அரைகுறையாக மருத்துவமனையைத் திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டிக்கின்ற வகையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தோம். ஆனால், காவல்துறை எங்களை மக்கள் பணி செய்யவிடாமல், கைது செய்கிறது.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க-வினர்

முன்கூட்டியே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தும், `மேலிடத்து பிரஷர்’ எனச் சொல்லி, காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது மருத்துவம் சம்பந்தப்பட்ட விவகாரம். காவல்துறையினருக்கும் சேர்த்துதான் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஜுரம் வந்துவிட்டது. அதனால்தான் காவல்துறையினரை ஏவி எங்களை ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்’’ என்றார் கொதிப்போடு.

இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள சித்ரா மஹாலில் தங்க வைத்திருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *