ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடித்த ‘3 BHK’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்த இந்தப் படத்திற்கு, பின்னணி பாடகி பாம்பே ஜெயஶ்ரீயின் மகனான இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார்.
படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சரத்குமார் பேசும்போது, “என்னுடைய மகன் பிரபு (சித்தார்த்) படத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் இங்கே பேசிட்டாரு. அப்படிப் பேசுறதுதான் நல்லது.
ஆனா, அதுக்குனு சல்மான் கான் மாதிரி சட்டைக்கு பின்னாடி கண்ணாடி போடக் கூடாது (சிரித்துக்கொண்டே…). இந்தப் படத்துல பெரிய அளவிலான கேமரா ஷாட்கள் கிடையாது.
சின்ன வாடகை வீட்டுல நடக்கிற கதைதான் இந்தப் படம். ரெண்டு பாடல்கள், ஃபைட் காட்சிகள் வச்சோம்னு இல்லாம, ஶ்ரீ கணேஷ் அவர் நினைச்ச விஷயங்களைப் படத்துல வச்சிருக்காரு. இந்தக் கதையை மக்கள் தங்களோடு பொருத்திப் பார்க்கிறாங்க.
இப்படி ஒரு கதையை ஶ்ரீ கணேஷ் கொடுக்கணும்னு நினைச்சதே பெரிய விஷயம். அதுல அவர் இப்போ ஜெயிச்சும் இருக்காரு. அவர் சத்தம் போட்டுப் பேச மாட்டாரு. ஆனா, அவர் சத்தம் போட்டா யாராலையும் அங்கே பேச முடியாது.
இந்தப் படத்துக்கு அம்ரித் ராம்நாத்தோட இசை உயிர் கொடுத்திருக்கு. அவர் என்னோட வாட்ச் பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. அதை அவருக்கே பரிசா கொடுத்துடுறேன். சுப்மன் கில் மாதிரி அம்ரித், நல்ல இன்னிங்ஸ் ஆடணும்.
தேவயாணி இவ்வளவு இனிமையா பேசி நான் பார்த்ததே இல்ல. எப்பவுமே அமைதியாதான் இருப்பாங்க. ஆனா, அவங்க டைரக்டரா மாறின பிறகு இவ்வளவு பேச ஆரம்பிச்சிருக்காங்க.” என்று கூறினார்.