
50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன்
கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் வேன், இன்று காலை 7.30 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 7.45 மணியளவில் செம்மங்குப்பம் ரயில்வே பாதையை கடக்கும்போது, அதில் வந்து கொண்டிருந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால், பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்த சாருமதி என்ற 16 வயது மாணவியும், ஆறாவது படித்த நிவாஸ் என்ற 12 வயது மாணவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மக்கள், வேனில் இருந்த மாணவர்களையும், வேன் ஓட்டுநரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வேன் உருக்குலைந்த நிலையில், பயணிகள் ரயில் ஆலப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து கேட் கீப்பர் அறைக்குள் நுழைந்த பொதுமக்கள், கேட்டை மூடாததால்தான் விபத்து ஏற்பட்டதாக கேட் கீப்பரை தாக்க ஆரம்பித்தனர்.
அதற்கு அங்கு சென்ற எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட போலீஸார், பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். கே கீப்பர் கேட்டை போடாததால்தான் விபத்து ஏற்பட்டது என பெற்றோர்களும், பொதுமக்களும் குற்றம் சுமத்தி வரும் நிலையில், `எங்கள் முதல்கட்ட விசாரணையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கேட் கீப்பர் மூடத் துவங்கியபோது, வேன் டிரைவர் வேனை வேகமாக இயக்கியிருக்கிறார்.
அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. கேட் மூடப்படவில்லை என்பதும், ஆளில்லா ரயில்வே கேட் என்பது உண்மைக்கு புறம்பான தகவல்’ என்றும் தெரிவித்திருக்கிறது தெற்கு ரயில்வே.
ஒரே குடும்பத்தில் உயிரிழந்த அக்கா, தம்பி
ரயில்வே துறையின் இந்த முரண்பாடான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம். “அந்தப் பள்ளி வேனில் நான்கு மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
அதில் இருவர் உயிரிழந்துவிட்டனர்” என்றவரிடம் ரயில்வே துறையின் விளக்கம் குறித்து கேட்டப்போது, “கேட் போடாததால்தான் நான் போனேன் என்று கூறுகிறார் வேன் டிரைவரான சங்கர். அதனால் முழுமையான விசாரணை நடத்திய பிறகே விபத்துக்கான காரணம் தெரிய வரும்” என்றார்.
இதற்கிடையில் கடலூர் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட, செழியன் என்ற 10 வகுப்பு படித்த 15 வயது மாணவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே உயிரிழந்த சாருமதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் செம்மங்குப்பம் பகுதி மக்களிடம் பேசினோம். “இந்த பயணிகள் ரயில் தினமும் ஆலங்குப்பம் பகுதியில் நின்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.
அதனால் ஆலங்குப்பத்திற்கு முன்பே ரயிலின் வேகம் குறைந்துதான் வரும். இன்றும் அப்படித்தான் வந்தது. அதேபோல பள்ளி வேன் அப்போதுதான் மாணவர்களை ஏற்றிவர சென்று கொண்டிருந்தது.
அதனால் அதில் அதிக மாணவர்கள் இல்லை. ரயிலின் வேகம் குறைவாக இருந்ததும், வேனில் அதிக மாணவர்கள் இல்லாததால்தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இல்லையென்றால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்” என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர் மக்கள்.
விபத்துக்கு கேட் கீப்பர் மட்டுமா காரணம் ?
இது ஒருபுறமிருக்க இந்த விபத்தால் அங்கிருந்த மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த விபத்தை வேடிக்கைப் பார்க்க வந்த ஒரு முதியவர், அந்த மின்சாரக் கம்பிகளின் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
ரயில்வே ஊழியரான பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது தெற்கு ரயில்வே. அத்துடன், `கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்படுகிறது.
அதேபோல விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000-ம் நிவாரணமாக வழங்கப்படும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது.

இந்நிலையில் இந்த விபத்துக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
அதேபோல, `ரயில்வே பணியாளர் உறங்கிவிட்டதால் கதவை மூட மறந்தது தான் விபத்துக் காரணம் என்று ஒரு தரப்பிலும், கதவை மூடப் பணியாளர் முயன்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர் தடையை மீறி வேனை ஓட்ட முயன்றதுதான் விபத்துக்கு காரணம் என்று தொடர்வண்டித் துறை தரப்பிலும் கூறப்படுகிறது.
4 உயிர்கள் பறிபோவதற்கு காரணமான விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ரயில்வே அதிகாரிகள் சிலர், “ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தால், லோலோ பைலட்டுக்கு அந்த இடத்தை கடப்பதற்கான சிக்னல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி சிக்னல் கிடைக்கவில்லை என்றால், ரயில் அந்த இடத்தை கடந்திருக்கக் கூடாது. அதனால் இந்த விபத்துக்கு கேட் கீப்பர் மட்டுமல்ல, ரயிலின் லோகோ பைலட் மற்றும் தொழில்நுட்பமும் காரணகாக இருக்கலாம்” என்கிறார்கள்.