
இது அனைவருக்கும் இருக்கும் கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலாக, ‘நீங்கள் அதை எப்படி கையாள்கிறீர்கள்?’ என்பதை பொறுத்தே, அது நல்லதாகவும், கெட்டதாகவும் அமையும் என்று கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன்.
“வீட்டுக் கடனை எடுப்பதன் மூலம் ஒரு வீடு நமக்கு சொந்தம் ஆகும். வாடகை கொடுத்து ஒரு வீட்டில் இருப்பதை விட, இ.எம்.ஐ கட்டி, சொந்த வீடு ஒன்றை வாங்கலாம்.
மேலும், காலப்போக்கில், அதன் மதிப்பும் உயரும். அது உங்களது சொத்தாகவும் கூடும்.
ஆனால், கடன் வாங்கி இரண்டாவது வீடு வாங்குவது என்பது நல்ல ஐடியா இல்லை.
இ.எம்.ஐ எவ்வளவாக இருக்கலாம்?
வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ உங்களது வருமானத்தின் 40 – 50 சதவிகிதத்தைக் கட்டாயம் தாண்டக் கூடாது. உதாரணத்திற்கு, உங்களது மாத வருமானம் ரூ.1 லட்சம் என்றால், உங்களது மாத இ.எம்.ஐ ரூ.40,000 – 50,000 ஆக இருக்க வேண்டும்.
ஃபிக்ஸ்ட் வட்டி விகிதமா? ஃப்ளோட்டிங் வட்டி விகிதமா?
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் ஃபிக்ஸ்ட் வட்டி விகிதத்தை விட குறைவாக இருக்கும். ஆனால், ரெப்போ வட்டி விகிதத்திற்கு ஏற்ப, இது அதிகமாவதற்கான வாய்ப்பு உண்டு.
இப்போதைக்கு ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு லாபமே. காரணம், இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் இது மாறலாம்.
கையில் எவ்வளவு காசு இருந்தால் நல்லது?
வீடு வாங்க, கடன் இல்லாமல் 10 – 20 சதவிகிதத் தொகை முன்பணமாக உங்கள் கையில் இருப்பது நல்லது. மேலும், பதிவு மற்றும் முத்திரை கட்டணங்களுக்கான தொகையையும் உங்கள் கையில் இருந்து செலவு செய்ய இருப்பதுபோல, பார்த்துக்கொள்வது நல்லது.
வீட்டுக் கடன் எவ்வளவு ஆண்டுகளுக்கு இருக்கலாம்?
அதிக காலம் என்பது குறைந்த இ.எம்.ஐ. ஆனால், உயர்ந்த வட்டி. 10 – 20 ஆண்டுகளுக்குள் வீட்டுக் கடனை கட்டி முடிப்பதற்கு நல்லது.

இடையில் காசு கிடைத்தால்?
இடையில், உங்கள் கையில் அதிக காசு சேர்கிறது என்றால், அதை வீட்டுக் கடனைக் கட்டுவதற்கு பயன்படுத்துங்கள். இதன் மூலம், வட்டியையும், கடன் காலத்தையும் குறைக்கலாம்.
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியது என்ன?
3 – 4 வங்கிகளில் வட்டி விகிதத்தை செக் செய்து, வீட்டுக் கடன் வாங்குவது நல்லது. அரசு வங்கிகளில் வட்டி விகித குறைப்பு அதிகம் இருக்கும்.
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு, உங்களது கிரெடிட் ஸ்கோரை ஸ்திரப்படுத்துங்கள். காரணம், இது உங்களுக்கு வட்டி விகித குறைப்பிற்கு உதவும்.
வீட்டுக் கடனில் இருக்கும் சிக்கல் என்ன?
வீட்டுக் கடன் வாங்கி சரியாக கட்டாமல் போகும் பட்சத்தில், உங்களது கிரெடிட் ஸ்கோர் பெரியளவில் பாதிக்கும். மேலும், சில நேரங்களில், வங்கிகள் வீட்டை ஜப்தி செய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ஆக, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு, என்ன செய்ய வேண்டும், இ.எம்.ஐ கட்டும் அளவிற்கான வருமானம் நம்மிடம் உள்ளதா, தொடர்ந்து சரியாக கடனை கட்டி முடித்துவிட முடியுமா என்று உங்களை நீங்களே, கேள்வி கேட்டு, பிளான் செய்து வீட்டுக் கடன் வாங்கலாம்.
அப்புறம் என்ன…உங்களுக்கு ஹேப்பியோ, ஹேப்பி!