• July 8, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் மகனுக்கு எல்லா உணவுகளோடும் தயிர் சேர்த்துச் சாப்பிடுவது வழக்கம். சைவ உணவுகளுக்கு ஓகே… ஆனால், மீன் போன்ற அசைவ உணவுகளை தயிருடன் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை… அதேபோல இரவில் தயிர் சாப்பிடுவது சரியானதா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

தயிர் என்பது பொதுவாக சற்று மந்தத்தை உருவாக்கக்கூடிய உணவு. அதாவது செரிமானத்தை மந்தமாக்கும் உணவு. தயிர் சாப்பிடும்போது, கூடவே, மீன் அல்லது புரதச்சத்துள்ள உணவுகளை எடுக்கும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் போகவும வாய்ப்பு உண்டு. 

தயிருடன் மீன் மட்டுமல்ல, கடல் உணவுகள் எதையுமே எடுத்துக்கொள்வது சரியல்ல. தயிருடன் மீன் சேர்த்துச் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. குறிப்பாக, சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. தயிரில் உள்ள வேதிப்பொருள்களும், மீனில் உள்ள சத்துகளும் எதிர்வினையாற்றுகின்றனவா என்பதை ஆய்வுபூர்வமாகப் பார்க்க வேண்டும்.  தயிரிலும் சத்துகள் அதிகம்… மீனிலும் சத்துகள் அதிகம் என்பதால் இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது, அதிக அளவிலான ஊட்டம் சேரும் என்பதற்காகவும் இந்த காம்பினேஷனை தவிர்க்கச் சொல்வதுண்டு. 

தயிர்

மீன் உள்ளிட்ட கடல் உணவுகளைச் சரியாகச் சமைக்காவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில் தயிரும் எடுக்கும்போது, செரிமானம் இன்னும் மந்தமாகி, அசௌகர்யத்தைக் கொடுக்கலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம் என்பதற்காகவும் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இரவில் தயிர் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதும், அது ஏற்படுத்தும் மந்தத்தன்மையின் காரணமாகச் சொல்லப்பட்டதுதான். இரவில் எப்போதும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றே சொல்வோம்.

இரவில்  தயிர் சாப்பிடுவதால், மந்தத்தன்மை கூடி, எதுக்களித்தல் பிரச்னையோ, ஏற்கெனவே சாப்பிட்ட பிற உணவுகள் சரியாக செரிக்காதது, அடுத்த நாள் வயிற்று உப்புசம் உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம்.  குளிர்காலத்தில் பொதுவாகவே இரவில் தயிர் உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம். அது லேசான குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பதுதான் காரணம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *