
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் ‘The Hunt – The Rajiv Gandhi Assassination Case’ வெப் சீரிஸ்.
புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய ‘Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.
1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால்.
லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார்.
இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு!

சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது.
நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்!
ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி.
இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார்.

எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர்.
நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.
ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து ‘நெக்ஸ்ட் எபிசோடு’ பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன.
இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா!

இந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்!
ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்!

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம்.
அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் ‘மேல் அதிகாரிகளின் உத்தரவு’ என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.
யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. “உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது” என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.!