
ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட், அதிபர் புதினால் நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார்.
மாஸ்கோவின் புறநகர் பகுதியில் காரில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்யா அதிகாரிகள் கூறுகின்றனர் என செய்திதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இன்று, ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டின் உடல் அவரது தனிப்பட்ட காரில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.” என ரஷ்யாவின் புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் புதினால் நீக்கப்பட்டவர்!
53 வயது நபரான ரோமன் ஸ்டாரோவாய்ட் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்ட ஒரு ஆண்டிலேயே அதிபர் புதினால் நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கம் குறித்து வெளியான அரசாணையில் அதற்கான காரணம் எதுவும் விளக்கப்படவில்லை.
எனினும் சில அரசியல் விமர்சகர்கள், குர்ஸ்க் மாகாணத்தில் நடைபெறும் ஊழல் விசாரணைகளுடன் தொடர்புகொண்டதாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
ஸ்டாரோவாய்ட்டைத் தொடர்ந்து துணை போக்குவரத்து அமைச்சராக இருந்த ஆண்ட்ரி நிகிடின் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அமைச்சர் பதவிக்கு வரும்முன் ஸ்டாரோவாய்ட், குர்ஸ்க் மாகாணத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்துள்ளார்.
குர்ஸ்க் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியபோது இவரது பதவி ஆட்டம் கண்டது. உக்ரைனுக்கு பதிலடி கொடுக்க ஒதுக்கப்பட்ட நிதியிலேயே ஊழலும் நடந்திருப்பதாக சில அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சுமார் 1 பில்லியன் ரூபிள் வரை ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 105 கோடி ரூபாய்.
இந்த ஊழல் விசாரணையில் ஸ்டாரோவாய்டின் வாரிசு அலெக்ஸி ஸ்மிர்னோவ் உட்பட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.