• July 7, 2025
  • NewsEditor
  • 0

இன்றைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன.

2019 வரை டெஸ்டில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என யாரேனும் ஒருவர் முச்சதம் அடித்துக்கொண்டிருந்தார்.

கடைசியாக 2024-ல் பாகிஸ்தானுக்கெதிராக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முச்சதம் அடித்திருந்தார்.

ஆனால், டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன் அடிப்பதென்பது 2004-ம் ஆண்டுக்கு முன்பும் சரி, இன்றும் சரி யாரும் நினைத்துகூட பார்த்திராத ஒன்றுதான்.

Brian Lara – பிரையன் லாரா

அந்த அதிசயத்தை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா 2004-ல் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக 582 பந்துகளில் 400 ரன்கள் அடித்து நிகழ்த்தியிருந்தார்.

அதற்குப் பின்னர், முன்னாள் இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்தனே 2006-ல் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 374 ரன்கள் அடித்து லாராவின் சாதனைக்கு அருகில் வரமுடிந்ததே தவிர அதை முறியடிக்க முடியவில்லை.

லாரா அந்த சாதனை நிகழ்த்தி சரியாக 2 தசாப்தங்களுக்குப் பிறகு அதை முறியடிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தும் அதைத் தன்னலமின்றி தனது அணிக்காகத் தியாகம் செய்திருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர்.

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் கேஷவ் மஹாராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.

Wiaan Mulder - வியான் முல்டர்
Wiaan Mulder – வியான் முல்டர்

அப்போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர்கள் லுஹான் ட்ரே ப்ரிடோரியஸ் 153, வியான் முல்டர் 147, கார்பின் போஷ் 100 என மூன்று பேர் சதமடித்திருந்தனர்.

இவ்வாறிருக்க, நேற்றைய தினம் வியான் முல்டர் தலைமையில் இத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது.

முதல்நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 465 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா. கேப்டன் வியான் முல்டர் 264 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் வியான் முல்டர் முச்சதத்தைக் கடந்தார். மதிய உணவு இடைவேளையின்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவிந்திருந்தது.

வியான் முல்டர் 334 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 367 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

லாராவின் சாதனையை முறியடிக்க வெறும் 34 ரன்கள்தான் தேவை, உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் வியான் முல்டர் அதை நிகழ்த்திக்காட்டுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

Wiaan Mulder - வியான் முல்டர்
Wiaan Mulder – வியான் முல்டர்

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து அதிர்ச்சி கொடுத்தார் வியான் முல்டர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்றாலும் வியான் முல்டரின் இந்த தன்னலமற்ற செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

லாராவின் சாதனையை வியான் முல்டர் முறியடிக்காமல் விட்டாலும், வெளிநாடு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் மற்றும் வீரர், கேப்டனாக அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்தவர், டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர், டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த தென்னாபிரிக்க கேப்டன் மற்றும் வீரர், ஒரு இன்னிங்ஸில் 100+ ஸ்ட்ரைக்ரேட்டில் 350+ ரன்கள் அடித்த ஒரே வீரர் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wiaan Mulder - வியான் முல்டர்
Wiaan Mulder – வியான் முல்டர்

அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 27 ஓவர்களில் 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஜிம்பாப்வே அணி ஃபாலோ ஆனை தவிர்க்கவே இன்னும் 300+ ரன்கள் அடிக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *