
சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்றுத் திருமணங்கள், பெண்களைக் கட்டாயப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது உள்ளிட்டக் காரணங்களால் கணவர்களும் பாதிக்கப்படுவது அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறது சமீபத்தில் வெளியான செய்தியறிக்கை ஒன்று.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் 5 மாநிலங்களில் மட்டும் 785 மனைவிகள் கணவரைக் கொலை செய்துள்ளதாக அந்த செய்திதளம் தெரிவிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற ரகுவன்ஷி, ரகசிய உறவில் இருந்த அவரது மனைவியால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். இது நாடுமுழுவதும் பேசு பொருளானது.
மற்றொரு பிரபலமான வழக்கில் ஒரு பெண்மணி அவரது கணவரை கொலை செய்து ட்ரம்மில் உடலைப் போட்டு, அழுகும் வரை வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் குடித்துவிட்ட வந்த கணவரை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்றார் ஒரு மனைவி.
ஆண்கள் நடத்தும் அட்டூழியங்களும் இவை எதற்குமே சளைத்ததில்லை. லிவ்-இன் உறவுகளும் பாதுகாப்பானதென சொல்லிவிட முடியாத சூழல். இவற்றுடன் செலிபிரிட்டிகளின் உறவுகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகள் வேறு…
இவையெல்லாம் சேர்ந்து திருமணம், காதல் என எந்தவொரு உறவிலும் ஈடுபடும் முன் பலமுறை சிந்திக்க வைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 785 கொலைகளும் வழக்காகப் பதிவு செய்யப்பட்டவை. பயம், சமூக அழுத்தம் அல்லது ஆதாரமில்லாததால் பல கதைகள் வெளிவராமல் இருக்கலாம்.
திருமணம் மட்டுமே ஒரு குடும்பத்தை உருவாக்கத் தேவையான பாதுகாப்பான அமைப்பு என்ற நிலை மாறிவருவதாகவே பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரிடையே புரிதல், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முதிர்ச்சி மற்றும் சமத்துவம் இருந்தால் மட்டுமே ஒரு கூரையின் கீழ் வாழ்வதென்பது சாத்தியமாகும்.
பொறுமையாக இரு, அட்ஜஸ்ட் செய்து போ, விட்டுக்கொடு என ஒருவர் மீது அழுத்தம் கொடுத்து நச்சு உறவில் தக்கவைக்க முயற்சிக்கும் அபத்தத்திலிருந்து சமூகம் தன்னை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த அசம்பாவிதங்கள் நமக்கு கூறுகின்றன.