• July 7, 2025
  • NewsEditor
  • 0

நாளை காலை நடைபெறவுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் வடம் பிடிக்க குறிப்பிட்ட சாதியினரை, மற்றொரு சாதியினர் அனுமதிப்பதில்லை என்று குற்றச்சாட்டு 25 ஆண்டுகளுக்கு முன் எழ, அதைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, பின்பு அனைத்து சாதியினரும் வடம் பிடித்து தேர் இழுப்பதையும், எந்தவொரு நபருக்கும் முதல் மரியாதை வழஙகக் கூடாது என்றும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்தும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேரோட்ட விழாவில் பிரச்னைகள் எழ, கோயில் குடமுழுக்கு, தேர் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்ட பின்பு கடந்த ஆண்டு தேரோட்டம் நடந்தது. அனைத்து சாதியினரும் கலந்துகொண்டு தேரோட்டம் சிறப்பாக நடந்ததாக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால், “நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு தேரோட்டம் நடக்கவில்லை, தேர் இழுக்க டோக்கன் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டபட்டது, பட்டியல் சாதியினர் உள்ளிட்ட பல சாதியினர் அனுமதிக்கப்படவில்லை, இந்தாண்டு முறையாக யாருக்கும் முதல் மரியாதை அளிக்காமல் அனைத்து சாதியினரும் பங்கெடுக்கும் வகையில் தேரோட்டம் நடத்த வேண்டும்’ என்று கண்டதேவியைச் சேர்ந்த கேசவமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு காட்டவில்லை, அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதுபோல் நடக்கும்” என்று அரசு தரப்பு கூற, தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள், “தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இருந்தால் உரிய அமைப்பிடம் புகார் அளியுஙகள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்கம், நம்பிக்கைகள் இருக்கும். அதில் நீதிமன்றம் உடனே தலையிட முடியாது, ஏற்கெனவே இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. அதனால், தற்போது எந்த உத்தரவும் விதிக்க முடியாது” என்று வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில்தான் நாளை காலை நடைபெறவுள்ள தேரோட்ட நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்படுகளை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

தேரோட்ட பொறுப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட சிவகங்கை கலெக்டர் பொற்கொடி தேரோட்டத்துக்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறைகள் வாரியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.பி தலைமையில் 2,000 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

தேர் செல்லக்கூடிய 4 வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ளனர்.

கண்டதேவி தோரோட்டம்

கண்டதேவி கோயில் அருகில் 9 துறை அலுவலர்களுக்கு கட்டுப்பாட்டு அறை அமைத்து, முக்கிய இடங்களில் 42 கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்களும் பணியிலிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேவகோட்டை சப் கலெக்டர், தேரோட்டப் பணியினை சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடத்துவதற்கு ஏதுவாக 15 சிறப்பு நிர்வாக நடுவர்களை நியமித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

சப் கலெக்டர் மூலம் தேர் இழுப்பவர்களுக்கு உரிய அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளதுடன் மற்ற அலுவலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது.

தேரோட்டம் அன்று, திருக்கோயில் ஆகம வழக்கப்படி நடைமுறைகளை பின்பற்றியும், தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திடவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 3 மருத்துவ குழுக்களும், 3 அவசர கால ஊர்திகளும் 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர வருகின்ற மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்று, மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *